நுண்ணறிவு தலைக்கவசத்தை உருவாக்கிய அரசுப் பள்ளி மாணவிகள்..!

Update:2023-07-22 14:10 IST

விலை மதிப்பற்ற உயிரை சிலர் சிறிய கவனக்குறைவினாலும், அலட்சியத்தினாலும் இழந்து விடுகின்றனர். இதுபோன்ற உயிரிழப்புகள் பெரும்பாலும் சாலை விபத்துகளினாலேயே ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியும், மது அருந்திவிட்டு வண்டி ஓட்டி சாலை விபத்துகளிலும் சிக்கிவிடுகிறார்கள்.

ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கான அடிப்படையாக இருப்பவர்கள், சாலை விபத்தில் சிக்கி இறக்கும்போது, அந்த குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது. எனவேதான் உயிரின் முக்கியத்துவம் அறிந்து, விபத்துகளை தவிர்க்க சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக, ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டவும், மது அருந்தாமல் வண்டி ஓட்டவும் அறிவுறுத்துகிறார்கள். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 4 மாணவிகள், நுண்ணறிவு திறனால் மேம்படுத்தப்பட்ட நவீன ஹெல்மெட்டை உருவாக்கி, சாலை விபத்துக்களை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். யாழினி, சர்மிளா, பூஜா, கங்கா ஆகிய மாணவிகள்தான், தங்கள் பள்ளியின் புத்தாக்க மேம்பாட்டு திட்ட ஆசிரியர் ஓம் பிரகாஷ் வழிகாட்டுதலுடன் நுண்ணறிவு தலைக்கவசத்தை (ஸ்மார்ட் சென்சார் ஹெல்மெட்) கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். இது மது அருந்தியிருந்தாலும், ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்ட முயற்சித்தாலும், வாகனத்தை இயக்க விடாது. இன்னும் நிறைய அவசியமான சென்சார்களை கொண்டு இந்த ஹெல்மெட்டை உருவாக்கி இருக்கிறார்கள். இதுபற்றி மாணவிபூஜா பகிர்ந்து கொள்கிறார்.

''நான் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எங்கள் பள்ளியில் காலையில் நடந்த வழிபாட்டு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அன்பழகன், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தினை பற்றி கூறினார். அதனை தொடர்ந்து இந்த திட்டத்தின் கீழ் பள்ளியில் 6 குழுக்கள் புதிய கண்டுபிடிப்புகளில் இறங்கியது. அதில் எங்கள் 'கலாம்' அணி கலந்து ஆலோசித்து, விபத்து தடுப்பு மற்றும் நல்லொழுக்கத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் நுண்ணறிவு தலைக்கவசத்தை கண்டுபிடிக்கலாம் என்று முடிவு செய்தோம்.

குறிப்பாக நாங்கள் நுண்ணறிவு தலைக்கவசத்தை கண்டுபிடிக்க காரணம் என்னவென்றால், எங்கள் பள்ளியில் பயிலும் சக மாணவ-மாணவிகளில் சிலர் தங்களது பெற்றோரை இருசக்கர வாகன விபத்தில் இழந்துள்ளதுதான்.




விபத்து மற்றும் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் குறித்து ஆராய்ந்தால், அது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டுதல் என்பதாகவே இருக்கிறது. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண நுண்ணறிவு தலைக்கவசத்தை கண்டுபிடிக்க முடிவு செய்தோம். இதனை எங்கள் வழிகாட்டி ஆசிரியர் ஓம் பிரகாசிடம் தெரிவித்தோம். அவரும் அதனை ஆமோதித்தார். இதைத்தொடர்ந்தே நாங்கள் நுண்ணறிவு தலைக்கவசத்தை கண்டுபிடித்தோம்'' என்றார்.

இவரைத்தொடர்ந்து பிளஸ்-1 உயிரியல் பாடப்பிரிவு மாணவி சர்மிளா சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

''நுண்ணறிவு தலைக்கவசத்தால் 2 பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். ஒன்று மது அருந்தாமல் இருந்தால் மட்டுமே தலைக்கவசத்தை அணியலாம். மற்றொன்று தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் புறப்படும்.

தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள ஆல்கஹால் சென்சார், வாகனம் ஓட்டுபவர் மது அருந்தியிருந்தால், தலைக்கவசம் அணிவதை தடுக்கும். அதாவது மது அருந்தியிருந்தால் அந்த சென்சார் சத்தமிடும். மேலும் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டுள்ள லீவர் சுவிட்ச் சென்சார் தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் புறப்பட அனுமதிக்கும். தலைக்கவசம் அணியாவிட்டால் இருசக்கர வாகனத்தை இயக்க விடாது'' என்று முடித்தார்.

இவ்விருவரை தொடர்ந்து, யாழினி பேச ஆரம்பித்தார். பிளஸ்-1 உயிரியல் மாணவியான இவர், நுண்ணறிவு ஹெல்மெட்டை, மிக குறைந்த விலையில் தயாரித்தது பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

''இந்த நுண்ணறிவு தலைக்கவசத்தினை அணிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டினால் விபத்தையும், உயிரிழப்பையும் தடுக்கலாம். இந்த தலைக்கவசத்தை தயாரிக்க ஆன செலவு ரூ.4 ஆயிரத்து 500 ஆகும். அதிக எண்ணிக்கையில் தயார் செய்யும்போது இந்த தலைக்கவசத்தின் அடக்க விலை ரூ.1,500 வரை குறைய வாய்ப்பிருக்கிறது. எதிர்காலத்தில் இந்த தலைக்கவசத்தை தயாரிக்க யாராவது முன்வந்தால், அவர்களுக்கு ஆலோசனை கூற எங்கள் அணியினர் தயாராக உள்ளோம். இந்த தலைக்கவசத்தினை மேம்படுத்த யார் முன்வந்தாலும் அவர்களோடு இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம்'' என்றார்.

''இந்த நுண்ணறிவு தலைக்கவசத்தில் கூடுதலாக எதிர்காலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே இருசக்கர வாகனம் செல்லும்போது, அதன் வேகத்தை தானாக குறைக்க சென்சார் அமைக்க முடிவு செய்துள்ளோம்.

இருசக்கர வாகனத்தை ஓட்டும்போது செல்போன் அழைப்புகளை எடுக்காமல் குறுஞ்செய்தி (மெசேஜ்) மட்டும் பெறும்படியான அலைமுடக்கி சென்சார் அமைக்கவுள்ளோம். வாகன நிறுத்தம் பகுதியில் இருசக்கர வாகனத்தை கண்டுபிடிக்கவும், தலைக்கவசம் தொலைந்தால் கண்டறியவும் உணரி சென்சார் அமைக்கவுள்ளோம்'' என்று ஹெல்மெட்டை நவீனமாக்கும் எதிர்கால திட்டங்களை பட்டியலிடுகிறார், 10-ம் வகுப்பு மாணவி கங்கா.



மாணவிகளை தொடர்ந்து, பள்ளியின் புத்தாக்க மேம்பாட்டு திட்ட வழிகாட்டி ஆசிரியர் ஓம் பிரகாஷ் பேசினார்.

''எங்கள் பள்ளியின் கலாம் அணி மாணவிகள் நுண்ணறிவு தலைக்கவசத்தை கண்டுபிடித்து, பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் மாவட்ட அளவில் தேர்வானார்கள். அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த மண்டல அளவிலான போட்டியிலும் தேர்வானார்கள். பின்னர் கடந்த மே மாதம் 5-ந்தேதி தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியிலும் முதல் 10 இடங்களுக்குள் பிடித்து, கடந்த மாதம் 27-ந்தேதி தமிழக முதல்-அமைச்சரிடம் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், பாராட்டு சான்றிதழும் பெற்றனர்.

மேலும் கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தென்னிந்திய அளவில் நடைபெறவுள்ள அறிவியல் கண்காட்சியில் இடம் பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவிகள் பலரையும் இதுபோன்ற கண்டுபிடிப்பாளர்களாக மாற்ற முயற்சி எடுத்து வரும் தமிழக முதல்-அமைச்சருக்கும், பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்துக்கும், பள்ளி கல்வித்துறைக்கும், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்திற்கும், யுனிசெப் நிறுவனத்துக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்ற கருத்துடன் விடைபெற்றார்.

மாணவிகளின் தொடர் ஆய்வுகளுக்கு எப்போதும் துணை நிற்போம்- கலெக்டர் கற்பகம்



நுண்ணறிவு தலைக்கவசத்தை கண்டுபிடித்து அசத்திய மாணவிகள் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகத்தையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணனையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கலெக்டர் கற்பகம் மாணவிகளிடம், ''உங்களது கண்டுபிடிப்பால் முதல்-அமைச்சரிடம் இருந்து விருது பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். உங்களின் தொடர் ஆய்வுகளுக்கு பள்ளிக்கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் எப்போதும் துணை நிற்கும்'' என்றார்.

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் தமிழ்நாட்டில் திறமையான தொழில் முனைவோர்களை உருவாக்க, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.) பள்ளிக்கல்வித்துறையின் முழு ஒத்துழைப்புடன் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனத்துடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ-மாணவிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை 4 கட்டங்களாக மதிப்பீடு செய்து மாநில அளவில் முதல் நிலை பெறும் 10 அணிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தினால்தான் மாணவிகள் யாழினி, சர்மிளா, பூஜா, கங்கா ஆகியோர் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்ட ஆசிரியர் ஓம் பிரகாஷ் வழிகாட்டுதலுடன் நுண்ணறிவு தலைக்கவசத்தை உருவாக்கி உள்ளனர். இதன்மூலம் மாநில அளவில் முதல் 10 இடங்களுக்குள் வெற்றி பெற்று கடந்த மாதம் 27-ந் தேதி சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கத்திற்கான காசோலையையும், பாராட்டு சான்றிதழ்களையும் பரிசாக பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்