உலக செஸ் சாம்பியன்ஷிப் 7வது சுற்று ஆட்டம்; வெற்றி வாய்ப்பை தவற விட்டு விட்டேன் - குகேஷ்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
சிங்கப்பூர்,
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. முதலாவது சுற்றில் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். மற்ற சுற்றுகள் டிராவில் முடிந்தது.
இதனால் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் 7வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது. இறுதியில் இந்த ஆட்டம் டிரா ஆனது.
இதன் காரணமாக இருவரும் தற்போது தலா 3.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். முதலில் 7½ புள்ளியை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 7வது சுற்று ஆட்டத்திற்கு பின் குகேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது,
வெற்றி பெறுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தும், அதை தவற விட்டு விட்டேன். இது கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனால் இன்னும் நிறைய ஆட்டங்கள் உள்ளன. மிக நன்றாக செயல்பட்டதை இந்த சுற்றில் எனக்குரிய சாதகமான அம்சமாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.