பாரா ஒலிம்பிக்கில் பதக்கம்: தீப்தி ஜீவன்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
இந்திய அணி இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
புதுடெல்லி,
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. நேற்று நடந்த பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக் 400 மீட்டர் டி20 போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில்,
"பாராலிம்பிக் 2024 ல் பெண்கள் 400 மீட்டர் டி20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள். அவர் எண்ணற்ற மக்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார்.அவருடைய திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியவை என பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள செய்தியில்,
"பாரீஸ் 2024 பாராலிம்பிக்சில் பெண்கள் 400 மீ - டி20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள். பல துன்பங்களை எதிர்கொண்டாலும் அவர் உறுதியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இன்னும் உயர்ந்த சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.