பாரீஸ் ஒலிம்பிக்: குரூப் சுற்றில் பி.வி. சிந்து எதிர்கொள்ளும் வீராங்கனைகள் விவரம்..

பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் குரூப் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து எதிர்கொள்ளும் வீராங்கனைகளின் விவரம் வெளியாகி உள்ளது

Update: 2024-07-12 11:12 GMT

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் குரூப் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து எதிர்கொள்ளும் வீராங்கனைகளின் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் மொத்தம் 39 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் ஒவ்வொரு குழுவிலும் மூன்று வீராங்கனைகள் என மொத்தம் 13 குழுக்களாக வீராங்கனைகள் பிரிக்கப்பட்டுள்ளனர்.

பி.வி.சிந்து, எஸ்டோனியா நாட்டை சேர்ந்த கிறிஸ்டின் குபா மற்றும் மாலத்தீவின் பாத்திமத் நபாஹாவை எதிர்கொள்கிறார். தரவரிசையில் கிறிஸ்டின் குபா 75வது இடத்திலும் , பாத்திமாத் 111வது இடத்திலும் உள்ளனர்.

பி.வி.சிந்து கடந்த 2016ம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கமும், கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.இம்முறையும் பதக்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைப்பாரா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்