பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் - அவினாஷ் சாப்லே நம்பிக்கை
கடந்த 2 ஆண்டுகளில் பயிற்சி அனுபவங்கள் எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளன என அவினாஷ் சாப்லே கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள இந்திய தடகள வீரரான மராட்டியத்தை சேர்ந்த 29 வயது அவினாஷ் சாப்லே அளித்த ஒரு பேட்டியில், 'நான் பாரீஸ் ஒலிம்பிக்கில் ஒரு பங்கேற்பாளராக மட்டும் இருக்க விரும்பவில்லை. என்னால் ஒரு பதக்கம் வெல்ல முடியும் என்று நம்புகிறேன். அந்த இலக்கை நோக்கி கடுமையாக உழைக்கிறேன்.
எல்லாம் சரியாக அமைந்தால் நான் பதக்கம் வெல்வேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் தனித்துவமான, கடினமான பயிற்சி அணுகுமுறையை கொண்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் பயிற்சி அனுபவங்கள் எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளன. இந்திய தடகள ஜாம்பவான்களான மில்கா சிங், பி.டி.உஷா போன்றவர்களின் சர்வதேச போட்டி செயல்பாடுகள் எனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது.
எனது முன்மாதிரிகள் உலக அளவில் சிறந்து விளங்கியதால் என்னாலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று நம்பினேன். மற்றவர்களை பார்க்காமல் எனது சொந்த முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்த கற்றுக் கொண்டேன். போட்டிகளில் கவனம் செலுத்துவதை விட எப்போதும் எனது சுயமுன்னேற்றமே குறிக்கோளாகும். இந்த எண்ணத்தால் தான் என்னால் 10 முறை தேசிய சாதனையை முறியடிக்க முடிந்தது.
2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும் போது கென்ய வீரர்களுக்கு எதிராக போட்டியிடுவதில் எனது கவனம் இருந்தது. அதில் 2-வது இடத்தை பிடித்தது, உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையை தந்தது. இவ்வாறு அவர் கூறினார்.