பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளி பதக்கம் கேட்டு வினேஷ் போகத் மேல்முறையீடு... இன்று தீர்ப்பு
தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.;
பாரீஸ்,
மல்யுத்தத்தில் 50 கிலோ உடல் எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் நேற்றிரவு அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டுபிரான்டுவை சந்திக்க இருந்தார். ஒரே நாளில் 8 மணி நேர இடைவெளியில் 3 வீராங்கனைகளுடன் மல்லுக்கட்டிய வினேஷ் போகத் இதற்காக கடுமையான உடல் உழைப்பை வழங்கியதால் தளர்ந்து போனார். இதனால் அவ்வப்போது நிறைய சத்தான மற்றும் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தது. அவருக்கு திடீர் பிரச்சினையாக உடல் எடை கூடியிருப்பது இரவில் கண்டறியப்பட்டது.
வினேஷ் போகத் வழக்கமாக 53 கிலோ எடைப்பிரிவில் விளையாடக்கூடியவர். இந்த முறை அந்த பிரிவுக்கு வேறு ஒரு இந்தியர் தகுதி பெற்றதால் அவர் 50 கிலோ எடைப்பிரிவுக்கு மாறினார். இதற்காக கஷ்டப்பட்டு தான் உடல் எடையை குறைத்தார். தொடர்ந்து அதே 50 கிலோ உடல்எடையை தக்கவைக்க உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும்.
நேற்று முன்தினம் இரவு போட்டிகள் முடிந்த பிறகு பரிசோதித்து பார்த்ததில், அவரது உடல் எடை 2 கிலோ வரை அதிகரித்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய உடல் பயிற்சியில் ஈடுபட்டார். உணவோ, தண்ணீரோ எடுத்துக் கொள்ளாமல் தொடர்ச்சியாக ஓட்டம், சைக்கிளிங், ஸ்கிப்பிங், ஆவி குளியல் என்று உடல் எடையை 50-க்குள் கொண்டு வருவதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் பயிற்சி நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் மேற்கொண்டார். இதனால் கணிசமாக எடை குறைந்தது.
இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்த அவருக்கு வழக்கமான நடைமுறைப்படி நேற்று காலை உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர் நிர்ணயித்த 50 கிலோவை விட 100 கிராம் எடை அதிகமிருப்பது தெரியவந்தது. எடையை குறைக்க டாக்டர்களின் அறிவுரைப்படி நீளமான முடியை கூட வெட்டி பார்த்தனர். ஆனால் பலன் இல்லை.
இதையடுத்து கொஞ்சம் கால அவகாசம் தரும்படி இந்திய தரப்பில் கேட்கப்பட்டது. அதை நிராகரித்த ஒலிம்பிக் கமிட்டியினர், விதிமுறைக்கு புறம்பாக வினேஷ் போகத்தின் எடை இருப்பதால் அவரை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக அதிரடியாக அறிவித்தனர். இதன் மூலம் அவரது பதக்கம் வாய்ப்பு பறிபோனது.
ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற மகத்தான சாதனையை படைக்கும் முனைப்புடன் தயாராகி வந்த வினேஷ் போகத்துக்கு, இந்த தகவல் பேரிடியாக விழுந்தது. ஏமாற்றத்துடன், கண்ணீரில் நிலைகுலைந்து போனார். இதற்கிடையே, முந்தைய நாள் இரவில் தொடர்ச்சியாக உடல் பயிற்சி செய்ததால் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை நேரில் சந்தித்து ஆறுதல்கூறிய இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா, வினேஷ் இப்போது நன்றாக இருக்கிறார். அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவும் வழங்கப்படும் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் மல்யுத்த போட்களில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இன்று அறிவித்திருந்தார்.
முன்னதாக தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார். மேலும் தனது தங்கப் பதக்கத்திற்கான போட்டியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த அவர், வெள்ளி பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த கோரிக்கை மீது விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.