தோனியிடம் இருந்துதான் விளையாட்டுக்கான உத்வேகத்தை பெற்றேன் - ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசாலே

பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

Update: 2024-08-01 12:12 GMT

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

7-வது நாளான இன்று துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா இரண்டுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை. இந்த பெருமையை ஸ்வப்னில் குசாலே, மனு பாக்கர் மற்றும் சர்ப்ஜோத் சிங் ஆகியோருடன் இணைந்து பெற்றுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 3 பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தனது கெரியரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை போன்றே, ஸ்வப்னில் குசாலேவும், ரெயில்வேயில்டிக்கெட் பரிசோதகராக தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனியிடம் இருந்து விளையாட்டுக்கான உத்வேகத்தை பெற்றதாக ஸ்வப்னில் குசாலே தெரிவித்துள்ளார். மேலும் தனது விளையாட்டில் அமைதியும் பொறுமையும் தேவை. அந்த இரண்டும் தோனியிடம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "துப்பாக்கி சுடுதல் உலகில் குறிப்பிட்டு யாரையும் நான் பின்பற்றுவதில்லை. இதற்கு வெளியே பார்த்தால் என்னை மிகவும் கவர்ந்தவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான். எனது விளையாட்டில் அமைதியும், பொறுமையும் மிகவும் அவசியம். களத்தில் அப்படிப்பட்ட ஒரு நபராக தோனி விளங்குகிறார். அது மட்டுமல்ல, டோனி தொடக்கத்தில் ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக இருந்தார். அவரை போலவே அதே பணியில்தான் நானும் இப்போது இருக்கிறேன்" என்று கூறினார்.

மேலும் களத்தில் தோனி தனது இன்னிங்சை மெதுவாக ஆரம்பித்து பின் அதிரடியாக விளையாடுவார். தோனியை போலவே, குசலேயும் முதல் சுற்றின் முடிவில் 6வது இடத்தில் இருந்து முன்னேறி பதக்கம் வென்று அசத்தினார்.

எம்.எஸ்.தோனியை போலவே டிக்கெட் கலெக்டராக தொடங்கி இன்று இந்தியாவின் ஹீரோவாக ஸ்வப்னில் குசாலே ஜொலித்திருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்