பாரீஸ் ஒலிம்பிக்: தொடக்க விழா முடிந்ததும் மனைவியிடம் மன்னிப்பு கோரிய இத்தாலி வீரர்... காரணம் என்ன?

பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பு அங்குள்ள சென் நதியில் நடந்தது.

Update: 2024-07-28 01:27 GMT

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. 128 ஆண்டு கால ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக ஒலிம்பிக் தொடக்க விழாவை ஸ்டேடியத்தில் இல்லாமல், நகரின் மையப்பகுதியில் உள்ள சென் நதியில் நடத்தி சாத்தியமே இல்லை என்று சொன்னவர்களை எல்லாம் வாயடைக்க செய்திருக்கிறது,

பாரீஸ் ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பு அங்குள்ள சென் நதியில் நடந்தது. இதில் படகில் பயணித்த இத்தாலி அணிக்கு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான உயரம் தாண்டுதல் வீரர் ஜியான்மார்கோ தம்பேரி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தினார்.

தேசிய கொடியை அசைத்து உற்சாகமாக படகில் வலம் வந்த அவர் கையில் அணிந்திருத்த திருமண மோதிரம் நழுவி நதியில் விழுந்து விட்டது. திருமண மோதிரத்தை தவறவிட்ட ஜியான்மார்கோ தனது மனைவி சியாராவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'என் அன்பே மோதிரத்தை தவறவிட்டதுக்காக மிகவும் வருந்துகிறேன். இந்த மோதிரத்தை நான் இழக்க நேரிட்டால், அதற்கு இதைவிட சிறந்த இடத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இந்த அழகான நகரத்தின் ஆற்றுப்படுகையில் அது என்றும் இருக்கும். இதனை விட பெரிய தங்கத்துடன் வீடு திரும்புவதற்கு இது ஒரு அறிகுறியாக இருக்கலாம்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்