பாரீஸ் ஒலிம்பிக்; காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறினார்.;
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் பேட்மிண்டனில் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து 21-5, 21-10 என்ற புள்ளிக்கணக்கில் (2-0 செட் கணக்கில்) வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறினார். ரவுண்ட் ஆப் 16 சுற்றில் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோவை எதிர்கொள்கிறார்.