பாரீஸ் ஒலிம்பிக்; வெண்கலம் வென்ற சரப்ஜோத் சிங், மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

Update: 2024-07-30 11:37 GMT

image courtesy: AFP / X

புதுடெல்லி,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் 5-வது நாளான இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கல பதக்க போட்டியில் இந்தியாவின் சரப்ஜோத் சிங் - மனு பாக்கர் இணை, தென் கொரியாவின் ஜின் ஓ யே - வோன்ஹோ லீ இணையை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய இணை 16-10 என்ற கணக்கில் தென் கொரிய ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இது நடப்பு தொடரில் இந்தியாவின் 2-வது பதக்கமாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், வெண்கலப்பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங், மனு பாக்கருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, நம் துப்பாக்கிசுடுதல் வீரர்கள் நாட்டுக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகின்றனர். ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

இருவரும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தியதால் இந்தியாவே மகிழ்ச்சியாக உள்ளது. இரண்டாவது பதக்கம் வென்ற மனு பாக்கர் நிலையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்