பாரீஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை: பாலின சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிப் தங்கம் வென்று அசத்தல்

மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் இமானே கெலிப் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

Update: 2024-08-10 01:07 GMT

image courtesy: AFP

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர்.

இதில் இன்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் அல்ஜீரியா வீராங்கனை இமானே கெலிப், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

முன்னதாக 66 கிலோ உடல் எடைப்பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிப்புடன் மோதினார். இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது. முதல் ரவுண்டில் 46 வினாடிகள் மட்டும் ஆட்டம் நடந்த நிலையில் கரினி, தொடர்ந்து விளையாட மறுத்தார்.

தனது விளையாட்டு வாழ்க்கையில் இவ்வளவு கடினமான குத்துகளை யாரிடமும் வாங்கியதில்லை என்று கண்ணீர் மல்க கூறி வெளியேறினார். இதையடுத்து இமானே கெலிப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இமானே கெலிப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. இதனால் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு முன்பாக அவர் தகுதி நீக்கப்பட்டார்.

தற்போது பல சர்ச்சைகளை தாண்டி அவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்