பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்; காலிறுதியில் தோல்வி கண்ட இந்திய மகளிர் அணி
இந்திய அணி 1-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.;
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் இந்தியா இதுவரை 3 பதக்கங்கள் (3 வெண்கலப் பதக்கம்) வென்றுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதி சுற்றில் இன்று ஜெர்மனியை எதிர்கொண்டது. இந்த போட்டியின் முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி (ஸ்ரீஜா அகுலா - அர்ச்சனா கிரிஷ் காமத் இணை, மணிகா பத்ரா) தோல்வி கண்டது. இதனால் ஜெர்மனி 2-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 3வது ஆட்டத்தில் (அர்ச்சனா கிரிஷ் காமத்) இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற 4வது ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெர்மனி வீராங்கனை அன்னெட் காப்மென் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலாவை 11-6, 11-7, 11-7 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தினார்.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி 1-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியிடம் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறியது.