100 கிராம் எடைக்காக வினேஷ் போகத் தகுதி நீக்கம்: அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்: நடந்தது என்ன..? முழு விவரம்
மல்யுத்த விராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.;
பாரீஸ்,
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நேற்று களம் புகுந்தார். தனது முதல் சுற்றில், முந்தைய ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரும், 4 முறை உலக சாம்பியன் மற்றும் ஆசிய விளையாட்டு சாம்பியனுமான ஜப்பானின் யு சுசாகியை எதிர்கொண்டார்.
6 நிமிடங்கள் கொண்ட இந்த பந்தயத்தில் தொடக்கத்தில் அவரது கையே ஓங்கி இருந்தது. முடிவில் 3-2 என்ற கணக்கில் சுசாகியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் தொடர்ச்சியாக 82 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போட்ட சுசாகியின் பேராதிக்கத்துக்கு வினேஷ் முற்றுப்புள்ளி வைத்தார்.
இதைத் தொடர்ந்து கால்இறுதியில் வினேஷ் போகத், ஐரோப்பிய முன்னாள் சாம்பியனான உக்ரைனின் ஒக்சானா லிவாச்சை எதிர்கொண்டார். ஒக்சானா கடும் சவால் அளித்த போதிலும் அவரை 7-5 என்ற புள்ளி கணக்கில் சாய்த்தார்.
இரவில் அரங்கேறிய அரைஇறுதியில் வினேஷ் போகத், கியூபாவின் லோபஸ் யுஸ்னேலிஸ் குஸ்மேனை எதிர்கொண்டார். முடிவில் வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளி கணக்கில் லோபசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
இந்நிலையில் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோ 100 கிராம் (அதாவது கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதாக தகவல்) இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பாரிஸ் ஒலிம்பிக் குழு கூறுகையில், "பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்று இறுதிப்போட்டிக்கு சென்ற வினேஷ் போகத், தேவையான எடையை விட கூடுதலாக 100 கிராம் எடை இருக்கிறார். இது போட்டியின் விதிகளை மீறுவதாக கருதப்படுவதால் அவர் இறுதிப்போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் வினேஷ் போகத் விளையாடும் எடைப்பிரிவு 53 கிலோ. ஆனால், அதற்கு வேறொரு வீராங்கனை தகுதி பெற்றதால், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க முடிவு செய்த வினேஷ், அதற்காக 53 கிலோ எடையில் இருந்த தனது உடல் எடையை, 3 கிலோ குறைத்தார். இதனால், தகுதிச்சுற்றில் கூட அவர் பல இன்னல்களை சந்தித்தார். இதன் பிறகே 50 கிலோ எடைப்பிரிவில் தகுதி பெற்றார்.
பல கட்ட இன்னல்களுக்கு பிறகுதான் பாரீஸ் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டிற்கு அவர் முன்னேறி இருந்தார்.
தொடர்ந்து மூன்று போட்டிகளில் பங்கேற்றதால், அவர் எடுத்துக்கொண்ட ஊட்டசத்துக்கள் காரணமாக, நேற்று இரவு முதலே தோராயமாக 2 கிலோ எடை அதிகரித்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே, இரவு முழுவதும் தூங்காமல், ஜாகிங், ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல் என அனைத்து பயிற்சிகளையும் அவர் செய்தார்.
இந்நிலையில், இன்று இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பு எடையை சோதனை செய்தபோது, தேவையான எடையை விட 100 கிராம் எடை அதிகமாக இருந்துள்ளார். அதாவது 50 கிலோ 100 கிராம் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இருப்பினும், எடையை குறைக்க அவருக்கு வாய்ப்பளிக்குமாறு இந்தியத் தூதுக்குழு ஒலிம்பிக் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வாய்ப்பு அளிக்கப்படாத சூழலில், வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 24 மாதங்களாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல இன்னல்களை சந்தித்த வினேஷ் போகத், தற்போது பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்திற்கு, பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன்..! நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.
அதே சமயம், நீங்கள் நெகிழ்ச்சித்தன்மையை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வா..! நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் வினேஷ் தகுதி நீக்கத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும் என்றும் பி.டி.உஷாவிடம் பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் எடையை குறைக்க சாப்பிடாமல் இரவு முழுவதும் உடற்பயிற்சி செய்ததால் நீர்ச்சத்து குறைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினேஷ் போகத் விவகாரத்தில், மத்திய விளையாட்டு துறை மந்திரி மன்சுக் மாண்டவியா மக்களவையில் இன்று விளக்கம் அளித்தபோது, எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.