நீரஜ் மட்டுமல்ல.. அர்ஷத்தும் என்னுடைய மகன்தான் - நீரஜ் சோப்ராவின் தாயார் பேட்டி
நீரஜ் வெள்ளி பதக்கம் வென்றது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று அவரது தாயார் கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்கள் பங்கேற்றனர்.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் நீரஜ் சோப்ரா தனது அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் வீசினார். ஆனால் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வியப்பூட்டும் வகையில் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அதனை நீரஜ் சோப்ராவால் முந்த முடியவில்லை. முடிவில் 90 மீட்டர் தூரத்துக்கு மேல் வீசிய ஒரே வீரரான அர்ஷத் நதீம் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
உலக சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துடன் 2-வது இடம் பெற்று வெள்ளி பதக்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவின் 5-வது பதக்கம் இதுவாகும். ஆண்டர்சன் பீட்டர்ஸ் வெண்கலப்பதக்கம் (88.54 மீட்டர்) பெற்றார்.
இந்த நிலையில் நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "நீரஜ் வெள்ளி பதக்கம் வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்கப்பதக்கம் வென்ற அந்த வீரரும் (அர்ஷத் நதீம்) எனது குழந்தை தான். அங்கு செல்லும் அனைவரும் கடினமாக உழைக்கிறார்கள்" என்று கூறினார்.