வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் மிகப்பெரிய சதி - விஜேந்தர் சிங்

ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன் வினேஷ் 100 கிராம் எடையை தாண்டியது அதிர்ச்சியளிக்கிறது என்று விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-08-07 11:30 GMT

புதுடெல்லி,

பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அவர், இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அவர் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்த போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தேர்வான வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு பின் மிகப்பெரிய சதி உள்ளது என இந்திய முன்னாள் குத்துச்சண்டை வீரரும், பாஜக நிர்வாகியுமான விஜேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விஜேந்தர் சிங் கூறியதாவது, இது இந்தியாவிற்கும் இந்திய மல்யுத்த வீரர்களுக்கும் எதிரான மிகப்பெரிய சதி. வினேஷ் போகத்தின் விளையாட்டு செயல்பாடு மிகவும் பாராட்டத்தக்கது. சிலருக்கு அந்த மகிழ்ச்சியை ஏற்க முடியாமல் போயிருக்கலாம்.

மேலும் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன் வினேஷ் 100 கிராம் எடையை தாண்டியது அதிர்ச்சியளிக்கிறது. நாங்கள் விளையாட்டு வீரர்கள் ஒரே இரவில் எங்களால் 5 முதல் 6 கிலோ வரை எடையை குறைக்க முடியும். இது கடினம் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் எங்கள் பசி, தாகம் மற்றும் தீவிர உழைப்பை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது எங்களுக்கு தெரியும். அவருக்கு 100 கிராம் எடையைக் குறைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, விஜேந்தர் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தைப் பெற்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்