'என் கனவை நிறைவேற்றிவிட்டார்...' - வினேஷ் போகத் வெற்றி குறித்து சாக்ஷி மாலிக் உருக்கம்

பல வருட தவத்திற்குப் பிறகு இன்று வினேஷ் போகத்தின் கனவு நனவாகியுள்ளதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-07 04:51 GMT

புதுடெல்லி,

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நேற்று களம் புகுந்தார். தனது முதல் சுற்றில், முந்தைய ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரும், 4 முறை உலக சாம்பியன் மற்றும் ஆசிய விளையாட்டு சாம்பியனுமான ஜப்பானின் யு சுசாகியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் தொடர்ச்சியாக 82 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போட்ட சுசாகியின் பேராதிக்கத்துக்கு வினேஷ் முற்றுப்புள்ளி வைத்தார்.

இதைத் தொடர்ந்து கால்இறுதியில் உக்ரைனின் ஒக்சானா லிவாச்சை 7-5 என்ற புள்ளி கணக்கில் சாய்த்தார். நேற்று இரவில் அரங்கேறிய அரைஇறுதியில் வினேஷ் போகத், கியூபாவின் லோபஸ் யுஸ்னேலிஸ் குஸ்மேனை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் பெற்றார். அத்துடன், குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கத்தை உறுதிசெய்துள்ளார்.

இந்த நிலையில், ஒலிம்பிக் பதக்கத்தை உறுதிசெய்துள்ள வினேஷ் போகத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. வினேஷ் போகத்தின் வெற்றி குறித்து, ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனையான சாக்ஷி மாலிக் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"எனக்கு இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்.. நாளை வினேஷ் இறுதிப்போட்டியில் தங்கப்பதக்கத்திற்காக போட்டியிடுகிறார். பல வருட தவத்திற்குப் பிறகு இன்று வினேஷ் போகத்தின் கனவு நனவாகியுள்ளது. அவரது கனவோடு, எனது மற்றும் கோடிக்கணக்கான நாட்டு மக்களின் நிறைவேறாத கனவையும் வினேஷ் நிறைவேற்றியுள்ளார். பதக்கம் உறுதி செய்யப்பட்டது. இந்த வெற்றி, எங்களுடைய போராட்டத்தில் எங்களுடன் உறுதுணையாக நின்றவர்களுக்கே.. அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் வினேஷுக்கு வாழ்த்துக்கள் பல."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்