ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய தேசிய கொடியை ஏந்துகிறார் மனு பாக்கர்
ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா இதுவரை 3 வெண்கலம் மட்டுமே வென்றுள்ள நிலையில் 9-வது நாளான நேற்று மயிரிழையில் ஒரு பதக்கம் நழுவிப்போனது.
துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதிசுற்று நேற்று நடந்தது. தகுதி சுற்றின் மூலம் தேர்வான இந்தியாவின் மனு பாக்கர் உள்பட 8 வீராங்கனைகள் பதக்கத்துக்கு மோதினர். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் பதக்கம் வென்று இருந்த அரியானாவைச் சேர்ந்த மனு பாக்கர் இந்த பிரிவிலும் பதக்கம் வென்று 'ஹாட்ரிக்' சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
முடிவில் மனு பாக்கரும், ஹங்கேரியின் வெரோனிகா மாஜேரும் தலா 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் சமனில் இருந்தனர். அவர்களில் யாரை வெளியேற்றுவது என்பதை முடிவு செய்ய தனியாக சூட்-ஆப் சுற்று நடத்தப்பட்டது. இதில் இருவருக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டது. மனு பாக்கர் தனது வாய்ப்பில் 3 புள்ளி எடுத்தார். ஆனால் வெரோனிகா 4 புள்ளி எடுத்து டாப்-3 இடத்திற்குள் நுழைந்தார். மனு பாக்கர் 28 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தார். 22 வயதான மனு பாக்கர் இந்த போட்டியிலும் பதக்கத்தை வென்று இருந்தால் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 3 பதக்கத்தை உச்சிமுகர்ந்த முதல் இந்தியர் என்ற புதிய சரித்திரத்தை படைத்து இருப்பார்.
போட்டிக்குப் பின்னர் பேசிய அவர், "இறுதிப்போட்டியில் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தேன். ஆனால் அது போதுமானதாக இல்லை. இரண்டு பதக்கம் வென்றது மகிழ்ச்சி தான். ஆனால் தற்போது இந்த பந்தயத்தில் 4-வது இடத்தை பிடித்தது சிறந்த நிலை இல்லை. பாரீஸ் ஒலிம்பிக்கில் எனக்குரிய போட்டிகள் முடிந்து விட்டன. என்னுடன் பணியாற்றிய பயிற்சி குழுவினர், உதவியாளர்கள் மற்றும் எனக்கு ஆதரவாக இருந்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி. 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் அனேகமாக இதை விட சிறப்பாக முடிப்பேன் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.
ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்ட போது, 'இது ஒரு வாழ்நாள் கவுரவமாகும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வேன்' என்று மனு பாக்கர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் இந்தியாவின் தேசிய கொடியை ஏந்த உள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.