பாரீஸ் ஒலிம்பிக்: சாதிக்குமா இந்திய ஆண்கள் ஆக்கி அணி..?

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்குகிறது.

Update: 2024-07-11 08:14 GMT

பாரீஸ்,

பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது, ஒலிம்பிக் விளையாட்டு. அங்கு ஒலிம்பியா என்ற இடத்தில் ஜியஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு விழாவாக இது கொண்டாடப்பட்டது.

தற்போது 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 14 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு தற்போதே அதிகரித்துள்ளது.

இதில் ஆக்கியை தேசிய விளையாட்டாக கொண்ட இந்தியா மீது உலக நாடுகளின் பார்வை விழுந்துள்ளது. ஏனெனில் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி தங்கப் பதக்கம் வென்று பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது. குரூப் பிரிவில் 5 வெற்றிகள் பெற்று அசத்தி, தங்கப்பதக்கப் போட்டியில், ஜப்பான் மீது ஆதிக்கம் செலுத்திய இந்தியா, 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்று, பாரீஸ் ஒலிம்பிக்கில் நேரடி தகுதி பெற்றது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பரபரப்பாக நடைபெற்ற வெண்கலப் பதக்கப் போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 41 ஆண்டுகளில் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை வென்று சாதித்தனர். இன்று வரை 12 ஒலிம்பிக் பதக்கங்களை ஹாக்கியில் மட்டும் வென்று சிறந்த அணிக்கான பெருமையைத் தக்க வைத்து வருகிறது.

இதனால் தேசிய விளையாட்டில் இந்திய அணி இந்தமுறையும் சாதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்