மகளிர் டி20 கிரிக்கெட்; 2வது ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
நவிமும்பை,
வெஸ்ட்இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நவிமும்பையில் இன்று நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியில் பேட்டிங்கில் ஸ்மிர்தி மந்தனா (54 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ்(73 ரன்) அரைசதம் அடித்தனர். பந்து வீச்சில் திதாஸ் சாது, தீப்தி ஷர்மா, ராதா யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.
வெஸ்ட்இண்டீஸ் அணியை பொறுத்தமட்டில் டியான்ட்ரா டோட்டின் (52 ரன்), கியானா ஜோசப் (49 ரன்) ஆகியோரை தவிர யாரும் சோபிக்கவில்லை. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி விளையாடும்.
அதேவேளையில் தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வெஸ்ட் இண்டீஸ் அணி கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.