பார்டர் - கவாஸ்கர் கோப்பை: பும்ராவுடன் அவர் இருந்திருந்தால்.. - ஆஸி. முன்னாள் வீரர் கருத்து

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது.

Update: 2024-12-20 12:23 GMT

image courtesy: AFP

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தலை கொடுத்து வருகிறார். 3 போட்டிகள் முடிவில் இதுவரை 21 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இவருக்கு அடுத்து இந்தியா தரப்பில் சிராஜ் 13 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட் லீ பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தற்சமயத்தில் உள்ள மற்ற பவுலர்களை விட பும்ரா மிகவும் தொலைவில் சிறந்த பவுலராக இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார். அப்படிப்பட்ட அவருடன் முகமது ஷமி இருந்திருந்தால் இத்தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை தெறிக்க விட்டிருக்கும் என்றும் பிரட் லீ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஜஸ்பிரித் பும்ரா உலகத்தரம் வாய்ந்தவர். துரதிர்ஷ்டவசமாக இந்திய அணியில் முகமது ஷமி இல்லை. பும்ராவுடன் அவர் இருந்திருந்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்திருக்கும். சிராஜ் கொஞ்சம் தடுமாற்றமாக செயல்பட்டாலும் பும்ரா நன்றாக பந்து வீசியுள்ளார். என்னுடைய கருத்துப்படி இந்திய அணி சில நல்ல வேகப்பந்து வீச்சாளர்களுடன் நல்ல அட்டாக்கை கொண்டுள்ளது.

ஆனாலும் ஜஸ்பிரித் பும்ரா சுமையை சுமக்கிறார் என்று மக்கள் சொல்கிறார்கள். அந்தளவுக்கு பும்ரா மிகவும் நன்றாக பந்து வீசுகிறார். அவர் மற்ற பவுலர்களை விட மிகவும் அதிக மைல்கள் தொலைவில் முன்னோக்கி இருக்கிறார். இது உலகில் விளையாடும் மற்ற பவுலர்களுக்கு அவமரியாதையாக சொல்லவில்லை. ஆனால் ஜஸ்பிரித் பும்ரா அந்தளவுக்கு நன்றாக செயல்படுகிறார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்