மகளிர் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய அயர்லாந்து
இலங்கை - அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
பெல்பாஸ்ட்,
அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றிருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி பெல்பாஸ்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லீயா பால் 81 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, அயர்லாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறியது. இலங்கை அணியின் வெற்றிக்கு ஹர்ஷிதா சமரவிக்ரமா தனி ஆளாக போராடி சதமடித்து அசத்தினார். இருப்பினும் இலங்கை அணி 48 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில், 240 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அயர்லாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.