பார்டர்-கவாஸ்கர் தொடரை கைப்பற்ற விராட் கோலி அதிக ரன் குவிக்க வேண்டும் - ஆஸி. முன்னாள் கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

Update: 2024-11-18 05:11 GMT

Image Courtesy: AFP

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த இரு டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி வரலாறு படைத்தது. இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. ஆனால் இந்த முறை இந்தியாவின் சவாலை நிச்சயம் முறியடிப்போம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால் விராட் கோலி அதிக ரன் குவிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர் விராட் கோலியின் பேட்டிங் சாதனை அசாதாரணமானது.

இன்னும் சொல்லப்போனால் அவர் இந்தியாவை விட ஆஸ்திரேலிய மண்ணில் தான் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவில் 13 டெஸ்டுகளில் ஆடி 6 சதங்கள் அடித்துள்ளார். இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால், அதிக ரன் குவிக்கும் வீரராக விராட் கோலி இருக்க வேண்டும். அவருடன் ரிஷப் பண்டும் கணிசமாக ரன் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்