விமான நிலையத்தில் பெண் பத்திரிகையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விராட்.. என்ன நடந்தது..?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற உள்ளது.

Update: 2024-12-19 12:40 GMT

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் 3-வது போட்டி சமனிலும் முடிவடைந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது போட்டி வரும் 26-ம் தேதி மெல்போர்னில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் பிரிஸ்பேனிலிருந்து மெல்போர்ன் புறப்பட்டு சென்றனர்.

அந்த சமயத்தில் விராட் கோலி விமான நிலையத்தில் ஒரு பெண் பத்திரிகையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது குழந்தைகளை புகைப்படம் எடுத்ததாக கருதி விராட் கோலி கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து பத்திரிகையாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அது குறித்து வெளியான தகவலின் படி, மெல்போர்ன் விமான நிலையத்தில் விராட் கோலி தன் குடும்பத்தை நோக்கி கேமரா இருந்ததும், தனது குழந்தைகளை போட்டோ எடுத்ததாக கருதி கோபம் அடைந்துள்ளார்.

மேலும் "எனது குழந்தைகளுக்கும், எங்களுக்கும் கொஞ்சம் தனியுரிமை தேவை. எனவே எனது அனுமதி இல்லாமல் அவர்களை புகைப்படம் எடுக்க முடியாது" என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் உங்கள் குடும்பத்தை புகைப்படம் அல்லது வீடியோக்களை எடுக்கவில்லை என்று பத்திரிகையாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட விராட் கோலி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்