அவரை கொஞ்சம் தனியாக விடுங்கள்- ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்திற்கு அஸ்வின் பதிவு

இந்திய முன்னணி வீரரான அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து நேற்று ஓய்வை அறிவித்தார்.

Update: 2024-12-19 14:28 GMT

asமும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்தார். இது பலருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது.

சென்னையை சேர்ந்த 38 வயதான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார்.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

டெஸ்டில் கும்பிளேவுக்கு (619 விக்கெட்) அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற பெருமைக்குரிய அவர் ஒட்டுமொத்தத்தில் 7-வது இடத்தில் உள்ளார். அத்துடன் 6 சதம், 14 அரைசதத்துடன் 3,503 ரன்களும் எடுத்துள்ளார். 116 ஒருநாள் போட்டியில் 156 விக்கெட்டும், 65 இருபது ஓவர் போட்டியில் 72 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.

38 வயதானாலும் இன்னும் சில வருடங்கள் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரின் பாதியிலேயே அஸ்வின் அதிரடியாக ஓய்வை அறிவித்தது பலருக்கும் ஆச்சரியமாக அமைந்தது.

முன்னதாக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் தவறாமல் பிளேயிங் 11-ல் இடம் பெறும் அஸ்வினுக்கு வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளில் கடந்த பல வருடங்களாகவே தொடர்ந்து வாய்ப்பளிப்பதில்லை.

அதனால் அஸ்வின் மனதிற்குள் ஆதங்கத்தையும் அவமானத்தையும் கொண்டிருந்திருக்கலாம் என்று அவருடைய அப்பா ரவிச்சந்திரன் கூறியுள்ளார். அதுவே தங்களிடம் கூட சொல்லாமல் தங்களது மகன் இப்படி ஓய்வு பெற காரணமாக இருந்திருக்கலாம் என்றும் ரவிச்சந்திரன் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "உண்மையில் எனக்கும் அந்த ஓய்வு கடைசி நிமிடத்தில்தான் தெரிந்தது. அஸ்வின் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. அவர் அறிவித்த ஓய்வை நானும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். ஆனால் அவர் ஓய்வு அறிவித்த விதத்தில் ஒரு பகுதி எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. மற்றொரு பகுதி மகிழ்ச்சியாக இல்லை. ஏனெனில் அவர் தொடர்ந்து விளையாடியிருக்க வேண்டும். ஓய்வு என்பது அவருடைய விருப்பம். எனவே அதில் நான் தலையிட முடியாது. அதை அவர் கொடுத்துள்ளார்.

ஆனால் அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அது அஸ்வினுக்கு மட்டுமே தெரியும். ஒருவேளை அது அவமானமாக இருக்கலாம். 14 - 15 வருடங்கள் களத்தில் விளையாடிய அவர் திடீரென ஓய்வு பெற்றுள்ளது எங்கள் குடும்பத்திற்கு ஆச்சரியம். அதே சமயம் ஒரு விதமான அவமானம் அவருக்குள் சென்று கொண்டிருந்ததால் நாங்கள் இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எவ்வளவு நாட்கள் அதை அவரால் சமாளிக்க முடியும்? அதனாலேயே அவர் இந்த முடிவை அறிவித்திருக்கலாம்" என்று கூறினார்.

இந்நிலையில் தனது தந்தையின் இந்த கருத்து குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின், "என் அப்பா ஊடகப் பயிற்சி பெற்றவர் அல்ல, டேய் அப்பா என்ன டா இதலாம். மற்ற வீரர்களின் அப்பாக்களைபோல் என்னுடைய அப்பாவும் பேசுவார் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. நீங்கள் அனைவரும் அவரை மன்னித்து அவரைத் தனியாக விட்டுவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்