உம்ரான் மாலிக் சரிவை சந்திக்க காரணம் இதுதான் - தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கருத்து
உம்ரான் மாலிக் சரிவை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்து டேல் ஸ்டெயின் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.;

image courtesy: PTI
கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக், ஐபி.எல். தொடரில் 155 கி.மீ வேகத்திற்கு மேல் பந்து வீசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அசுர வேகத்தில் பந்து வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்தார். அந்த காரணத்தால் 2022-ல் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இருப்பினும் அந்த வாய்ப்பில் நல்ல லைன், லென்த்தை பின்பற்றாமல் வேகத்தை மட்டும் நம்பி பந்து வீசிய அவர் ரன்களை வாரி வழங்கினார். அதனால் அறிமுகத் தொடருடன் கழற்றி விடப்பட்ட அவர் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி கொஞ்சம் முன்னேற்றத்தை சந்தித்தார். அதன் காரணமாக மீண்டும் இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட உம்ரான் மாலிக் தொடர்ந்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மீண்டும் 2023 ஐ.பி.எல். தொடரில் ரன்களை வாரி வழங்கியதால் அவரை தேர்வுக்குழு மொத்தமாக கழற்றி விட்டுள்ளது. அத்துடன் கடந்த ஐ.பி.எல். தொடரில் ஒரு போட்டியில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் அதன்பின் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இந்த சீசனுக்கான மெகா ஏலத்தில் முதல் சுற்றில் அவர் ஏலம் போகாத நிலையில், 2-வது சுற்றில் அடிப்படை விலைக்கே (ரூ.75 லட்சம்) கொல்கத்தா அணி வாங்கியது.
இந்நிலையில் இந்திய அணியின் மிகப்பெரிய பந்துவீச்சாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் இப்படி சரிவை சந்திக்க என்ன காரணம்? என்பது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பெராரி காரில் ஆறு கியர்கள் இருக்கும். ஆனால் அதை எப்போதுமே பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதுபோலத்தான் வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்க வேண்டும். தங்களுக்கு என்ன தேவையோ அந்த வேகத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் மைதானத்தில் இருக்கும் 60 ஆயிரம் ரசிகர்களை கரகோஷமிட வைக்க வேண்டும் என்பதற்காகவே 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீச முயற்சித்து தோற்றுப் போகிறார்கள். இப்படி இருந்தால் இரண்டு போட்டிகளுக்கு பிறகு உங்களுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போகலாம். அப்படித்தான் உம்ரான் மாலிக் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளார்" என்று கூறினார்.