எல்லா அணிக்கும் ஒரே மாதிரியான விதியை கடைபிடிக்க வேண்டும் - பண்ட் அவுட் குறித்து ரோகித்
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டுக்கு அவுட் கொடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 போட்டிகளிலேயே நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது.
3-வது நாளுக்குள்ளேயே முடிவடைந்த இந்த போட்டியில் நியூசிலாந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
முன்னதாக இந்த கடைசி போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் தனி ஆளாக வெற்றிக்கு போராடினார். அவர் 57 பந்துகளில் 64 ரன்கள் அடித்திருந்தபோது அஜாஸ் படேல் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். முதலில் நடுவர் அவுட் வழங்கவில்லை. பின்னர் நியூசிலாந்து ரிவ்யூ அப்பீல் செய்தது.
ரீப்ளேவில் ரிஷப் பண்ட் பேட்டில் பந்து பட்டதற்கான துல்லியமான அறிகுறி ஏதுமில்லை. பந்து பேட்டை நெருங்கும்போது அல்ட்ரா எட்ஜில் சிறிய அதிர்வு காணப்பட்டதை வைத்து அவுட் என கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்பதை கண்டறிய ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இதனால் பண்ட் அதிருப்தியுடன் வெளியேறினார். ஒருவேளை பண்டுக்கு அவுட் கொடுக்கப்படாவிட்டால் இந்திய அணி வெற்றி பெற அதிகம் வாய்ப்பு இருந்தது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், "ரிஷப் பண்டுக்கு 3-வது நடுவர் அவுட் வழங்கியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் ஏதாவது சொன்னால் அது ஏற்றுகொள்ளப்படாது. ஆனால் உறுதியான ஆதாரம் இல்லை என்றால் கள நடுவர் அளித்த தீர்ப்பைதான் அமல்படுத்த வேண்டும். அதுதான் எனக்கு சொல்லப்பட்டது. கள நடுவர் அவுட் இல்லை என்று அளித்த முடிவு எப்படி மாற்றப்பட்டது என்பது எனக்கு புரியவில்லை.
நடுவர்கள் எல்லா அணிக்கும் ஒரே மாதிரியான விதியை கடைபிடிக்க வேண்டும். உங்கள் மனதை மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள். அந்த முடிவு எங்கள் பார்வையில் மிகவும் முக்கியமானது. ரிஷப் மிக சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் எங்களை வெற்றிக்கு அழைத்துச் செல்வார் என்று உணர்ந்தேன். ஆனால் இது ஒரு துரதிர்ஷ்டவசமான வெளியேற்றம்" என்று கூறினார்.