குறைக்கப்பட்ட ஓவர்கள்.. அதிரடி காட்டிய இங்கிலாந்து... நமீபியாவுக்கு கடின இலக்கு நிர்ணயம்
மழையால் இரு அணிகளுக்கும் தலா 10 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக குறைக்கப்பட்டது.
டிரினிடாட்,
டி20 உலகக்கோப்பை தொடரில் தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 6 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரு இடங்களுக்கு வங்காளதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய 4 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் குரூப் சி-யில் குறிப்பாக இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் இன்று நடைபெறும் தங்களது கடைசி போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் திடீரென மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும், சிறிது நேரத்தில் மழை நின்றது. தொடர்ந்து மைதானத்தை தயார்ப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.
மழை காரணமாக ஆட்டம் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மீண்டும் சிறிது நேரம் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 10 ஓவர்களாக மீண்டும் குறைக்கப்பட்டது.
தொடக்கம் முதலே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். குறிப்பாக பேர்ஸ்டோ (31), ஹாரி புரூக் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும், மொயீன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரின் சில சிக்சர்களாலும் இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் குவித்தது.
நமீபியா தரப்பில் ட்ரம்பல்மன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து டி.எல். விதிப்படி 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நமீபிய அணி பேட்டிங் செய்ய உள்ளது.