ஐ.பி.எல். 2025: பெங்களூரு அணியிலிருந்து விலகும் மேக்ஸ்வெல்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மேக்ஸ்வெல் அன்பாலோ செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2024-07-30 05:27 GMT

image courtesy: AFP

சிட்னி,

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஆன கிளென் மேக்ஸ்வெல், ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். சீசனில் பெங்களூரு அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட அவர், அதன் பின் தற்போது வரை பெங்களூரு அணிக்காகவே விளையாடி வருகிறார்.

முந்தைய சீசன்களில் பெங்களூரு அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய மேக்ஸ்வெல் இந்த வருடம் நடைபெற்ற தொடரில் பெங்களூரு அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் 10 போட்டிகளில் விளையாடி வெறும் 52 ரன்கள் மட்டுமே அடித்த அவர், பந்து வீச்சிலும் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. இதனால் இவர் மீது பல முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஏலத்திற்கு முன்னதாக மேக்ஸ்வெல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து விலக உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதற்கான காரணம் என்னவெனில், மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகாரபூர்வ பக்கத்தை அன்பாலோ செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பெங்களூரு அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இருப்பினும் மேக்ஸ்வெல், இதற்கு முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்பற்றியிருந்தாரா? (பாலோ) இல்லையா? என்பது குறித்து எந்த வித தகவலும் குறிப்பிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்