ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நாம் தொடரை வெல்வோம் - ஷிகர் தவான்

இந்திய அணி இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

Update: 2024-11-05 13:34 GMT

image courtesy; AFP

மும்பை,

இந்திய அனி இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நாம் தொடரை வெல்வோம் என ஷிகர் தவான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஆஸ்திரேலிய மண்ணில் நாம் தொடர்ந்து மூன்றாவது முறையாக தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கின்றேன். கடந்து இரண்டு தொடர்களாக ஆஸ்திரேலிய மண்ணில் நாம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். எனவே அதே மனநிலையுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய மண்ணுக்கு இந்திய அணி செல்லும். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் அதிகளவு விளையாடி இருக்கிறார்கள். எனவே அவர்களுடைய அனுபவம் இளம் வீரர்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

இளம் தலைமுறையினரும் நல்ல நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கிறார்கள். தங்களுடைய திறமையை அவர்கள் ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் ரன் குவிப்பது என்பது அவர்களுக்கு நிச்சயம் சாதகமான விஷயமாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் வேகம் என்பது ஒரு சவாலாக இருக்கும். அதற்கு ஏற்றார் போல் நமது வீரர்கள் தயாராகிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இதேபோன்று 2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கின்றது. நாம் கடந்த ஒருநாள் உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றோம். பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா கூட்டணியில் இந்திய அணியில் திறமை வாய்ந்த சீனியர்கள், இளைஞர்கள் கலந்த வகையில் இருக்கிறார்கள் இதனால் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்