இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்னை மன்னிக்கவும் - முகமது ஷமி வருத்தம்

முகமது ஷமி காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை.

Update: 2024-10-27 10:17 GMT

மும்பை,

இந்திய வேகப்பந்து வீச்சாளர் 34 வயதான முகமது ஷமி கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் ஏறக்குறைய ஓராண்டாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வரும் அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய டெஸ்ட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் முகமது ஷமியின் பெயர் இடம் பெறாதது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பும்ரா, சிராஜ் ஆகியோருடன் அனுபவிக்க ஷமி விளையாடுவது அவசியம். ஆனால் காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் ஒரு வருடமாகியும் காயத்திலிருந்து குணமடைந்து இந்தியாவுக்காக ஆஸ்திரேலிய தொடரில் விளையாட வர முடியாததற்காக ரசிகர்களிடம் ஷமி மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது பற்றி இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு:- "எனது முயற்சிகளை மேற்கொண்டு பவுலிங் பிட்னசை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறேன். போட்டிக்கு தயாராகவும் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவும் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். தற்போதைய நிலைமையில் பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் என்னை மன்னிக்கவும். ஆனால் நான் விரைவாக உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தயாராக இருக்கிறேன். உங்கள் அனைவரையும் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்