இந்தியா எதிரணிகளை கண்டு பயப்படுவதில்லை.. அதற்கு விராட் கோலிதான் காரணம் - பாண்டிங்

இப்போதெல்லாம் வெளிநாடுகளில் ஆஸ்திரேலியா போன்ற எதிரணிகளை கண்டு இந்தியா பயப்படுவதில்லை என ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

Update: 2024-09-12 16:31 GMT

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.

காலம் காலமாக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா 2018/19-ம் ஆண்டு முதல் முறையாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்றது. அதே போல 2020/21 தொடரில் ரகானே தலைமையில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.

ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

மறுபுறம் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை இந்தியாவை 3 - 1 (5 போட்டிகள்) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இப்போதெல்லாம் வெளிநாடுகளில் ஆஸ்திரேலியா போன்ற எதிரணிகளை கண்டு இந்தியா பயப்படுவதில்லை என ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். அதற்கு 2014 - 2021 வரை கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி முக்கிய காரணம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அவர்கள் இதற்கு முன்பு பெறாத வெற்றியை காபாவில் பெற்றனர். இந்திய பேட்ஸ்மேன்கள் வெளிநாட்டு மண்ணில் நிலவும் சூழ்நிலைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர் என்று நினைக்கிறேன். எனவே ஒரு காலத்தில் இருந்ததைப் போல இந்தியா காபா போன்ற மைதானங்களால் பயமுறுத்தப்பட்டதாக நான் நினைக்கவில்லை. ஒருவேளை இது தேர்வு விஷயமாக இருக்கலாம். மற்றபடி அவர்கள் பெரிய அரங்கை கண்டு பயப்பட மாட்டார்கள்.

ஐபிஎல் தொடரால் இளம் இந்திய வீரர்கள் அழுத்தமான போட்டிகளை கண்டு பயப்படுவதில்லை. ஏனெனில் ஐபிஎல் என்பது அவர்களுக்கு உலகக்கோப்பை போல் இருக்கிறது. இதை நான் கடந்த 10 வருடங்களாக ஐபிஎல் தொடரில் இருப்பதால் சொல்கிறேன். அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் தோல்வியை நினைத்து பயப்படாமல் அதிரடியாக விளையாடுகின்றனர். அவர்களுடைய வேகப்பந்து வீச்சு துறையின் ஆழமும் சிறப்பாக முன்னேறியுள்ளது. கடந்த 6 - 7 வருடங்களாக அவர்களின் தலைமையும் வலுவாகியுள்ளது.

விராட் கோலியின் கேப்டன்ஷிப் இந்திய கிரிக்கெட்டை மாறியத்தில் மிகப்பெரிய வேலை செய்துள்ளது. ராகுல் டிராவிட் தலைமையில் அது கடந்த 4 வருடங்களாக தொடர்ந்தது. ஒரு அணியை சுற்றி விராட் கோலி போன்றவர் இருக்கும்போது செல்வாக்கு நன்றாக இருக்கும். இந்தியாவிடம் தற்போது நட்சத்திர வீரர்களும் உள்ளனர்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்