ஐ.சி.சி. தலைவரான ஜெய்ஷா... இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய செயலாளர் யார்...?
ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக கடந்த 1-ந் தேதி பொறுப்பேற்றார்.;
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக கடந்த 1-ந் தேதி பொறுப்பேற்றார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அவர் வகித்த செயலாளர் பதவி காலியாக உள்ளது. கிரிக்கெட் வாரிய விதிப்படி இந்த பதவியை 45 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும். எனவே அடுத்த மாதம் 2-வது வாரத்துக்குள் புதிய செயலாளரை நியமிக்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. எனவே புதிய செயலாளரின் பதவி காலம் சுமார் ஒரு ஆண்டு தான் உள்ளது. புதிய செயலாளருக்கான போட்டியில் குஜராத் மாநில கிரிக்கெட் சங்க செயலாளர் அனில் பட்டேல், இந்திய கிரிக்கெட் வாரிய இணை செயலாளர் தேவ்ஜித் சைகியா (அசாம்) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.