அணியிலிருந்து என்னை நீக்க மாட்டார்கள் என்று நினைத்தேன்.. ஆனால்.. - முகமது ஷமி வெளிப்படை

2015, 2019 ஒருநாள் உலகக்கோப்பைகளிலும் தாம் சிறப்பாக செயல்பட்டதாக ஷமி கூறியுள்ளார்.

Update: 2024-09-03 06:49 GMT

image courtesy: AFP

மும்பை,

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2013-ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகள் என மூன்று வகையான அணியிலும் இடம் பிடித்து விளையாடி உள்ளார். இவர் உலகக்கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதன் காரணமாக அதன் பின் எந்த கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை.

முன்னதாக 2023 உலகக்கோப்பையில் முதல் 4 போட்டியில் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது ஹர்திக் பாண்ட்யா காயமடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து களமிறங்கிய ஷமி சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்ப்ற்றினார். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 7 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா பைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அத்துடன் 24 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்தார். அத்துடன் உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையும் ஷமி படைத்தார்.

இந்நிலையில் 2023 போலவே 2015, 2019 உலகக்கோப்பைகளிலும் தாம் சிறப்பாக செயல்பட்டதாக ஷமி கூறியுள்ளார். இருப்பினும் 2023 உலகக்கோப்பையில் முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனில் தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று முகமது ஷமி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவை நேருக்கு நேராக கலாய்த்தார்.

அந்த வகையில் வாய்ப்புக்காக ஏங்கி பழகி விட்டதாக வெளிப்படையாக தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:- "எனக்கு அது பழகி விட்டது என்று நினைக்கிறேன். 2015, 2019 தொடர்களிலும் நான் அதே தொடக்கத்தை கொடுத்தேன். அது போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்திய பின் 'நன்றி கடவுளே இனிமேல் அவர்கள் என்னை நீக்க மாட்டார்கள்' என்று நினைத்தேன். வாய்ப்புக்காக கடினமாக உழைக்கிறேன்.

எனவே வாய்ப்பு கிடைக்கும் போது அதில் அசத்துவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். அப்படி நீங்கள் தயாராக இருந்தால்தான் உங்களை நீங்களே நிரூபிக்க முடியும். இல்லையேல் களத்தில் மற்ற வீரர்களுக்கு தண்ணீரை மட்டுமே எடுத்துச் சென்று கொடுக்க முடியும். அதனால் வாய்ப்பு கிடைக்கும்போது அதை நீங்கள் பிடித்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்