நான் இந்திய அணிக்கு தேர்வானதில் மகிழ்ச்சி அடைந்த முதல் நபர் அவர்தான் - நிதிஷ் ரெட்டி உருக்கம்

இந்திய அணிக்கு தேர்வானது குறித்தும் தனது ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்வில் தான் சந்தித்த சிரமங்கள் குறித்தும் தற்போது நிதிஷ் ரெட்டி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Update: 2024-07-12 07:24 GMT

image courtesy: AFP

ஐதராபாத்,

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நல்ல ஆல் ரவுண்டராக விளங்கிய நிதிஷ் குமார் ரெட்டி, 303 ரன்களும், 3 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தார். அவரை ரசிகர்கள் பலரும் பாராட்டி வந்தனர்.

இதன் காரணமாக அவரை சிறந்த ஆல் ரவுண்டராக மாற்ற வேண்டும் என்றும் அதற்கான பயிற்சியை விரைவில் பிசிசிஐ துவங்க வேண்டும் என்று விமர்சகர்கள் அப்போதே கூறியிருந்தனர். ஆனால் நிதிஷ் ரெட்டி இடமிருந்த ஆல்ரவுண்டர் திறமையை கண்ட தேர்வுக்குழு அவருக்கு உடனடியாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கியது. இருப்பினும் கடைசி நேரத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஜிம்பாப்வே பயணிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் இந்திய அணிக்கு தேர்வானது குறித்தும் தனது ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்வில் தான் சந்தித்த சிரமங்கள் குறித்தும் தற்போது நிதிஷ்குமார் ரெட்டி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "சிறுவயதில் நான் கிரிக்கெட் பயிற்சியை துவங்கியபோது எனது தந்தைக்கு ராஜஸ்தானுக்கு பணி மாற்றம் கிடைத்தது. ஆனால் எனது தந்தை என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்காக அவருடைய அரசு வேலையையே ராஜினாமா செய்து விட்டு எங்களோடு ஆந்திராவில் இருக்க முடிவு செய்தார். அப்போது அவர் எடுத்த அந்த முடிவை உறவினர்கள் மற்றும் பலரும் சரியல்ல என்று கூறி என் முன்னே திட்டினார்கள். ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் எனது கிரிக்கெட்டுக்காக என்னுடன் நின்றார்.

இன்று நான் ஐபிஎல் விளையாடி இந்திய அணிக்கு தேர்வானதில் மகிழ்ச்சி அடைந்த முதல் ஆள் என் தந்தை தான். என்னையும் என் தந்தையையும் திட்டிய உறவினர்கள் பலரும் தற்போது நேரில் வந்து விருந்துக்கு அழைக்கிறார்கள். எனது அப்பா இழந்த சுயமரியாதையை மீட்டு எடுத்துள்ளார். காயம் காரணமாக தற்போது இந்திய அணியில் விளையாட முடியவில்லை என்றாலும் மீண்டும் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வாவேன்" என்று உருக்கமாக கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்