அவர் பவுலர்களின் கேப்டன் - அக்சர் படேல் புகழாரம்

எதிரணி பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடித்தாலும் சூர்யகுமார் யாதவ் தங்களுக்கு ஆதரவு கொடுப்பதாக அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-29 04:24 GMT

image courtesy:AFP

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலர்களுக்கு அதிகமான ஆதரவை கொடுப்பதாக அக்சர் படேல் தெரிவித்துள்ளார். குறிப்பாக எதிரணி பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடித்தாலும் அவர் தங்களுக்கு ஆதரவு கொடுப்பதாக அக்சர் படேல் தெரிவித்துள்ளார். அப்படி கேப்டனே ஆதரவு கொடுப்பது இந்திய பவுலர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கிடைப்பதாகவும் அக்சர் படேல் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "சூர்யா பாய் தலைமையில் கடந்த வருடம் நான் ஆஸ்திரேலிய தொடரிலும் விளையாடியுள்ளேன். அவர் பவுலர்களின் கேப்டன் என்பதை நான் அறிவேன். அவர் முதலில் உங்களுடைய முடிவை எடுப்பதற்கு தேவையான சுதந்திரத்தை கொடுக்கிறார். நீங்கள் அடி வாங்கும்போது அவர் உங்களிடம் வந்து அது நல்ல பந்து என்று சொல்கிறார். அதே சமயம் தொடர்ந்து அறிவுரைகளையும் வழங்குகிறார். அந்த வகையில் ஒரு வீரராக அவரிடம் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவருடன் நான் 5 போட்டிகளில் விளையாடினேன். அதைத் தொடர்ந்து அவருடன் இப்போது விளையாடும்போது பெரிய மாற்றம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. முதல் 3 ஓவர்களில் நாங்கள் ரன்களை கொடுத்தபோது அவர் என்னிடம் நாம் இதை செய்வோம் அல்லது அதை செய்தால் விக்கெட் எடுக்க முடியும் என்பது பற்றி சொல்லினார். அதை செய்து பவுண்டரி அல்லது சிக்ஸ் வழங்கும் போது பிரச்சனையில்லை. உங்களால் இதை செய்ய முடியும் என்று கேப்டனே சொல்லும்போது அது பவுலர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கிறது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்