என்னுடைய அணியில் அவருக்கு இடமே கிடையாது - ஸ்ரீகாந்த் விமர்சனம்

ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-19 14:32 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் டி20 அணியில் இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் ஆகியோர் கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமான அபிஷேக் சர்மா 2வது போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதேபோல் மறுபுறம் கில்லை விட அதிரடியாக விளையாடி சிறந்த சாதனைகளை வைத்திருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தமக்காக ரன்களை அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் சுப்மன் கில்லுக்கு தம்முடைய அணியில் இடமே கிடைக்காது என்று இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அத்துடன் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"சுப்மன் கில் முதலில் என்னுடைய அணியிலேயே இருக்க மாட்டார். ருதுராஜ் கெய்க்வாட் எனது அணியில் தாமாக இடம் பிடிப்பார். அதேபோல அபிஷேக் சர்மா ஜிம்பாப்வே தொடரில் தானே அடித்தார் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் சுப்மன் கில்லும் அதே தொடரில் தமக்காக ரன்கள் அடித்துக் கொண்டார். குறிப்பாக மற்ற வீரர்களை போல அவர் ஒன்றும் அதிரடியாக விளையாடவில்லை. நமக்கு இடம் வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் ரன்கள் எடுத்தார்.

அதேபோல சமீபத்திய வருடங்களில் கேஎல் ராகுல் மற்றும் பாண்ட்யா ஆகியோர் துணை கேப்டன்களாக செயல்பட்டார்கள். ஆனால் தற்போது கேப்டன்ஷிப் பொறுப்பில் அவர்களின் முகவரியே காண முடியவில்லை. சாய் சுதர்சன், ருதுராஜ் போன்றவர்கள் எப்போதும் உழைத்து வாய்ப்பு பெற வேண்டிய நிலையில் உள்ளனர். எல்லாரும் சுப்மன் கில்லாக முடியாது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்