பெர்த் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் ஹர்ஷித் ராணா..? - வெளியான தகவல்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற உள்ளது.

Update: 2024-11-19 07:24 GMT

Image Courtesy: X (Twitter)

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. கடந்த இருமுறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளதால் இம்முறையும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் காத்திருக்கிறது.

அதே வேளையில் சொந்த மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வென்று 10 வருடங்கள் ஆகிவிட்டது. இதனால் இம்முறை இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. எனவே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை கைப்பற்றினால்தான் உலக டெஸ்ட் சாம்ப்யன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் இந்தியா ஆட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரரான முகமது ஷமி காயம் காரணமாக இடம் பெறவில்லை. அவர் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடி வருகிறார். அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகிய இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியில் அறிமுக வீரராக ஹர்ஷித் ராணா களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் இதுவரை ஒட்டுமொத்தமாக உள்ளூர் அளவில் ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், டி20 போட்டிகள் என மொத்தமாக 50 போட்டிகளில் கூட ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கம்பீருக்கு நெருக்கமான காரணத்தில் அவர் அறிமுகமாகலாம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்