நானாக இருந்திருந்தாலும்... - ரோகித் சர்மாவுக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆதரவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் விலகியுள்ளார்.

Update: 2024-11-19 10:42 GMT

image courtesy: AFP

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளங்களில் ஒன்றான பெர்த்தில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த அணியுடன் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவில்லை. அவரது மனைவி ரித்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் உடன் இருந்து கவனிப்பதற்காக அவர் செல்லவில்லை. இரு தினங்களுக்கு முன்பு ரித்திகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் ரோகித் சர்மா செல்ல விரும்பவில்லை. 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக அணியுடன் இணைந்து விடுவேன் என்று ரோகித் சர்மா தேர்வு குழுவினரிடம் கூறியுள்ளார். எனவே முதலாவது டெஸ்டில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்த இருக்கிறார்.

இதனிடையே முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவே ரோகித் சர்மாவிற்கு குழந்தை பிறந்து விட்டதால் அவர் முதல் போட்டியில் விளையாட வேண்டும் என்று கங்குலி போன்ற பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.

இந்நிலையில் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாதது சரிதான் என்றும் அவருக்கு குடும்பம் மிகவும் முக்கியம் என்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "எனது வாழ்க்கையிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றால் எனது மகள் பிறந்த தினம்தான். அது ஒரு டெஸ்ட் போட்டி வெற்றி அல்லது உலகக்கோப்பை வெற்றியை விட அதிகம். இது மிகவும் வித்தியாசமானது. நீங்கள் அதை எதற்கும் ஒப்பிட முடியாது.

எனவே தற்போது ரோகித் சர்மா தனது குடும்பம்தான் முக்கியம் என்று முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியது சரியான ஒரு முடிவுதான். இருந்தாலும் ரோகித் சர்மா இல்லாத இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியின்போது பின்னடைவை சந்திக்கும். நானாக இருந்திருந்தாலும் ரோகித் சர்மா எடுத்து அதே முடிவை தான் எடுத்திருப்பேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்