தோனி கம்ப்யூட்டரை மிஞ்சியவர் - சி.எஸ்.கே. முன்னாள் வீரர் புகழாரம்
தற்போதுள்ள அனைத்து கேப்டன்களும் கம்ப்யூட்டர் உதவியுடன் கேப்டன்ஷிப் செய்வதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.;

image courtesy: PTI
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2019-ம் ஆண்டு முழுமையாக ஓய்வு பெற்ற அவர் தற்போது ஐ.பி.எல். தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐ.பி.எல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 43 வயதை கடந்துள்ளார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை கடந்த வருடம் ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார்.
அத்துடன் அவர் பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். அந்த வாய்ப்பிலும் அதிரடியாக விளையாடிய தோனி இறுதி ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். இதனிடையே இந்த வருட ஐ.பி.எல். தொடருக்கான சென்னை அணியில் தோனி அன்கேப்டு வீரராக தக்க வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஐ.பி.எல். தொடரே அவரது கடைசி தொடர் என்று அனைவரும் நினைத்த வேளையில் இந்த சீசனிலும் அவர் விளையாட உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது அனுபவமும் அறிவும் நிச்சயம் சென்னை அணிக்கு கை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்நிலையில் இப்போதுள்ள அனைத்து கேப்டன்களும் எதிரணியின் பலம், பலவீனத்தை கம்ப்யூட்டர் உதவியுடன் கணக்கிட்டு கேப்டன்ஷிப் செய்வதாக இந்தியா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஆனால் எம்.எஸ். தோனி கம்ப்யூட்டரை ஏற்றுக்கொள்ளாமல் தமது வழியில் அணியை வழி நடத்துவார் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- " தோனி எனும் பெயரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் கம்ப்யூட்டர் என்ன பரிந்துரை செய்கிறது என்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார். தனது கால்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் கைகளுக்கு கை உறைகளையும் அணிந்துக் கொண்டு களத்திற்கு சென்று பீல்டிங் அமைப்பார். அவருக்கு அடுத்த பவுலர் யார் என்பது தெரியும். எப்போது எந்த சமயத்தில் எந்த பவுலரை பயன்படுத்த வேண்டும் என்பதும் அவருக்கு தெரியும்.
அணியை வழி நடத்துவதில் அவர் சிறந்த கேப்டன் என்று நினைக்கிறேன். சிஎஸ்கே போன்ற மிகப்பெரிய அணியை தோனி எனும் ஒரு நபரால் வெற்றிகரமாக நடத்த முடிகிறது. அவருக்கு கம்ப்யூட்டர் தேவையில்லை. அவர் கம்ப்யூட்டரை மிஞ்சியவர். வேண்டுமானால் கம்ப்யூட்டரை பின்பற்றும் அணிகள் மற்றும் அதை பின்பற்றாத அணிகளின் வித்தியாசத்தை பாருங்கள்" என்று கூறினார்.