3-வது டெஸ்ட்: முன்னணி வீரர்கள் மீண்டும் சொதப்பல்.. அஜாஸ் சுழலில் தடுமாறும் இந்தியா

இந்திய அணியின் வெற்றிக்காக ரிஷப் பண்ட் தனி ஆளாக போராடி வருகிறார்.;

Update:2024-11-03 11:33 IST

மும்பை,

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 59.4 ஓவர்களில் 263 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக அஜாஸ் படேல் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 174 ரன்களில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக வில் யங் 51 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு, நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் படேல் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா (11 ரன்கள்) மற்றும் விராட் கோலி (1 ரன்) இந்த முறையும் ஏமாற்றினர். மேலும் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், கில் மற்றும் சர்பராஸ் கான் தலா 1 ரன்னிலும் வரிசையாக ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்காக தனி ஆளாக போராடி வருகிறார். அவருக்கு மறுமுனையிலிருந்து இதுவரை ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணி தற்போது வரை 6 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்கள் அடித்துள்ளது. பண்ட் 53 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இந்திய அணி வெற்றி பெற இன்னும் 66 ரன்கள் தேவைப்படும் நிலையில், 4 விக்கெட்டுகள் மீதமுள்ளன.

இதனால் இந்த டெஸ்ட் அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்