2-வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது போட்டி இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷாண்டோ 76 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக நங்கெயாலியா கரோட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 253 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் வங்காளதேச பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வெறும் 43.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஆப்கானிஸ்தான் 184 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்காளதேசம் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரஹ்மத் ஷா 52 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக நசும் அகமது 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.