வரவு எட்டணா.. செலவு ஆறணா: உலக சேமிப்பு தினம்!
உலக சேமிப்பு நாளில், வங்கிகள் மற்றும் பல்வேறு லாப நோக்கமற்ற நிறுவனங்கள் பணத்தை சேமிப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்கின்றன.;
வரவுக்கு மீறி செலவு செய்தால் கடன் சுமை கழுத்தை நெரிக்கும். அதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் திட்டமிட்டு செலவு செய்வது அவசியம். அத்துடன், எதிர்காலத்திற்கான சேமிப்பும் மிக முக்கியம்.
சேமிப்பு மற்றும் சிக்கனத்தின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதி 'உலக சேமிப்பு தினம்' கொண்டாடப்படுகிறது. உலக அளவில் இந்த தினம் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட்டாலும் இந்தியாவில் அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் இன்று உலக சேமிப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
உலக சேமிப்பு நாளில், இலாப நோக்கமற்ற நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பணத்தை சேமிப்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்கின்றன.
வரலாறு
1924 ஆம் ஆண்டு அக்டோபர் இறுதியில் இத்தாலியின் மிலன் நகரில் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் முதல் மாநாடு நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட, இந்த மாநாட்டில் சேமிப்பின் அவசியம் குறித்து பேசப்பட்டது. அத்துடன், அக்டோபர் 31ஆம் தேதி உலக சிக்கன நாளாக பிரகடனம் செய்யப்பட்டு, ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த யோசனையை இத்தாலிய பேராசிரியர் பிலிப்போ ரவிஜா முன்மொழிந்தார்.
வரவு எட்டணா செலவு பத்தணா
1967ஆம் ஆண்டு வெளிவந்த பாமா விஜயம் திரைப்படத்தில் வரும் 'வரவு எட்டணா செலவு பத்தணா' என்கிற பாடலில் உள்ள அனைத்து வரிகளுமே எல்லா காலத்துக்கும் பொருந்தும் வகையில் சிக்கனத்தை வலியுறுத்துகின்றன. உதாரணமாக, "நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது, அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது" போன்ற வரிகளை குறிப்பிடலாம்.
இந்த பாடலில் வருவதுபோன்று வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற வகையில் நமது பட்ஜெட் இருந்தால் அது சிக்கலில் போய் முடியும். வரவு எட்டணா, செலவு எட்டணா என்றால் நிகழ்காலத்தில் சரிப்பட்டு வந்தாலும் எதிர்காலத்துக்கு கைகொடுக்காது. அதேசமயம், வரவு எட்டணா - செலவு ஆறணா என்று இருந்தால், அதுதான் சிக்கனம்.. அதுதான் சேமிப்பு.
எது சிக்கனம்?
சிக்கனமாக இருக்கவேண்டும் என்பதற்காக கஞ்சத்தனமாக இருத்தல் கூடாது. தேவைப்படும் உணவை உண்ணாமல், நல்ல உடைகளை உடுத்தாமல் இருப்பது சிக்கனம் அல்ல. அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல் பணத்தை சேமித்து வைப்பதில் பயன் இல்லை. அடிப்படை தேவைகளுக்கு செலவழித்து, மீதமுள்ள பணத்தை சேமித்து வைப்பதே சிக்கனம். சிறிய அளவிலான சேமிப்பு கூட அவசரத் தேவைகளின்போது கைகொடுக்கும். பணம் மட்டுமின்றி நாம் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிபொருளையும் சிக்கனமாக பயன்படுத்தவேண்டும்.