சந்தேகம் என்னும் கொடிய நோய்
சந்தேகத்திற்குரிய நபர்களை சந்தேகப்படுவதும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியமான ஒன்று.;
குடும்ப வாழ்வில் நிம்மதி குலைவதற்கு முக்கிய காரணியாக இருப்பது சந்தேகம். உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மருந்து உண்டு. ஆனால், மனதில் ஏற்படும் சந்தேகம் என்னும் நோயை குணப்படுத்த மருந்து கிடையாது. இதற்கான தீர்வு அவரவர் மனதிலேயே உள்ளது.
சந்தேகப்படும் மனநிலை உள்ள வீட்டில் நிச்சயம் மகிழ்ச்சி என்பது படிப்படியாக குறைந்துவிடும். குறிப்பாக, கணவர் மீது மனைவிக்கோ, மனைவி மீது கணவருக்கோ வீண் சந்தேகம் ஏற்பட்டால் அவர்களுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு பிரிவு வரை சென்றுவிடும். சந்தேகம் என்ற நோயை சரியான சமயத்தில் விரட்டாவிட்டால் அழகான குடும்பம்கூட பிரிந்து சின்னாபின்னமாக சிதறிவிடும்
சிலருக்கு சந்தேகம் என்பது உடன்பிறந்த வியாதி போன்று ஒட்டிக்கொண்டிருக்கும். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுவார்கள். அவர்களின் சந்தேகத்திற்கு எந்த முகாந்திரமும் இருக்காது. அவர்களை 'சரியான சந்தேகப் பேர்வழி' என்று சொல்கிறோம். அவர்களுக்கு எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள். உணர்ச்சி வேகத்தில் சம்பந்தம் இல்லாமல் சந்தேகப்பட்டு, தவறு செய்துவிட்டு, வாழ்க்கையையும் தொலைத்து விட்டு, வாழ்நாள் முழுவதும் வருந்திக்கொண்டு இருப்பார்கள்.
சந்தேகம் அதிகமாக அதிகமாக மனதில் சஞ்சலம் குடியேறுவதோடு ஒருவித மன அழுத்தம் ஏற்பட்டுவிடும். இதுவே நாளடைவில் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். ஏன்..? சந்தேகம் சிலரை மரணம் வரை கொண்டு செல்வதையும் காண்கிறோம்.
அதேசமயம், சந்தேகத்திற்குரிய விஷயங்களில், சந்தேகத்திற்குரிய நபர்களை சந்தேகப்படுவதும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியமான ஒன்று. எனவே, சூழ்நிலைகளை பொருத்து யாரிடம், எங்கு, எவ்வாறு, எதற்காக என்பதை நன்கு அறிந்துகொண்டு சந்தேகப்படுவது ஆரோக்கியமானது. இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவதன் மூலம் குடும்ப உறவுகள் வலுப்பெறும்.