பொங்கல் வைக்க உகந்த நேரம், வழிபடும் முறை
ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்த புது அரிசியில் பொங்கல் செய்யப்படும்.;
பொங்கல் என்பது தமிழக மக்களின் பழமை வாய்ந்த பண்டிகையாகும். மழைக் காலத்துக்கும் குளிர் காலத்துக்கும் பிறகு வரும் அறுவடைக் காலம் இந்தத் தினத்தில்தான் தொடங்குகிறது. உழைப்பின் பலனை அறுவடை செய்யும் நாள் இது. உழவுத்தொழிலுக்கும், உழவர்களுக்கும் மரியாதை செலுத்தும் உழவர் திருநாள் தை மாதத்தின் முதல் நாள்.
உலகில் உயிர்கள் தோன்றுவதற்கும், உலக இயக்கத்திற்கும் காரணமாக இருப்பவர் சூரிய பகவான். நாட்டின் முதுகெலும்பான உழவுத் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நாளில் பொங்கல் வைத்து வழிபடப்படுகிறது.
ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்த புது அரிசியில் பொங்கல் செய்யப்படும். புதுப் பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து மஞ்சள் கொத்தை எடுத்து கங்கணம் தயாரித்து பானையை சுற்றிக் கட்ட வேண்டும். பின்பு புது அரிசியுடன் வெல்லம், பாசிப்பருப்பு பால், நெய், முந்திரி, திராட்சை சேர்த்துப் புதிய அடுப்பில் வைத்து அவரவர் சம்பிரதாய முறைப்படி சர்க்கரைப் பொங்கல் வைக்கலாம். குல, இஷ்ட தெய்வத்தை வணங்கி பொங்கல் வைத்து பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என்று மூன்று முறை உச்சரித்து சூரியனை வணங்குவது நல்லது. முழுக் கரும்பு, மஞ்சள் செடி கொத்து, சிவப்பு பூசணி துண்டு, கிழங்கு வகை, பழ வகைகள், வெற்றிலை, பாக்கு தேங்காய், ஆகியவற்றையும் சூரிய பகவானுக்கு படைக்க வேண்டும்.
பூஜை முடிந்ததும் கோமாதாவான பசுவுக்கும் முன்னோர்களை நினைத்து காகத்துக்கும் பொங்கல் வைத்தபிறகு அனைவரும் பொங்கல் சாப்பிடலாம்.
தற்போது பெரும்பாலான மக்களுக்கு புது அரிசி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் கடையில் கிடைக்கும் பச்சரியை வாங்கி பொங்கல் வைப்பது வழக்கமாகிவிட்டது.
சூரிய வழிபாட்டை தைப் பொங்கல் அன்று மட்டுமல்ல, தினமும் வழிபடலாம். இயற்கை சக்தியான சூரியனிடம் இருந்து அதிகாலையில் வரும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை உடலில் படும்போது நரம்புகள் புத்துணர்வடைந்து உற்சாகமடைந்து உடல் வலிமை பெறுகிறது.
பொங்கல் வைக்கும் நேரம்
15.1.2024, தை 1, திங்கட்கிழமை தைப்பொங்கல்
பொங்கல் வைக்க நல்ல நேரம் காலை 6.00 - 7.30, 9.00 - 10.30, மதியம் 12.40 - 1.40
16.1.2024, தை 2, செவ்வாய்க்கிழமை மாட்டுப்பொங்கல்
கோ பூஜை செய்ய ஏற்ற நேரம் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை, 11 மணி முதல் 12 மணி வரை
மாட்டுப் பொங்கல் வைக்க ஏற்ற நேரம் காலை 8 மணி முதல் 9 மணி வரை
பாரம்பரிய வழக்கம்
பொங்கல் பண்டிகை நாளில், படையலுக்கான பொங்கல் இரண்டு வகைகளாக வைக்கப்படும். பச்சரிசி சாதத்தை குழைய வைத்து செய்யும் வெண் பொங்கல் ஒரு பானையிலும், சர்க்கரைப் பொங்கல் மற்றொரு பானையிலும் வைக்கப்படும்.
பொங்கல் பானை பொங்க வேண்டும் என்பதற்காக பால் சேர்க்கும் வழக்கத்தை பலர் கடைபிடிக்கன்றனர். ஆனால், இது பாரம்பரியமான வழக்கமல்ல. அரிசியை ஒரு முறை கழுவிய தண்ணீரை கீழே ஊற்றி விடவேண்டும். அதன் பிறகு, இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை கழுவும் தண்ணீரை பயன்படுத்தி பொங்கல் வைப்பது பாரமபரிய வழக்கம்.