சங்க இலக்கியங்கள் போற்றும் தை மாதம்

தைத்திருநாளை போற்றும் வகையில் சங்க இலக்கியங்களில் பல்வேறு பாடல்கள் மற்றும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.;

Update:2024-01-12 13:53 IST

உலகம் முழுவதும் தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக திகழும் பொங்கல் பண்டிகையானது, சங்க காலத்தில் அறுவடைத் திருநாளாகவே அறியப்பட்டது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வசித்து வரும் தமிழர்கள், ஜாதி, மதம் கடந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

சங்ககால இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை குறித்த குறிப்புகள் நேரடியாக இல்லாவிட்டாலும், தைத்திருநாளை போற்றும் வகையில் சங்க இலக்கியங்களில் பல்வேறு பாடல்கள் மற்றும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

'தைஇத் திங்கள் தண்கயம் படியும்' என்று நற்றிணையிலும், 'நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து' என்று ஐங்குறுநூறிலும், 'வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ'என்று கலித்தொகையிலும், 'தைஇத் திங்கள் தண்ணிய தரினும்' என்று குறுந்தொகையிலும், 'தைஇத் திங்கள் தண்கயம் போல்' என்று புறநானூற்றிலும் தைத்திருநாளின் சிறப்பியல்புகளை இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

என உழவுத் தொழிலே உலகத்தில் சிறந்தது என திருக்குறளில் திருவள்ளுவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது, பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர் பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது, எத்தனை வருத்தங்கள் இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது என்பதே வள்ளுவன் வாக்கு.

'மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சீவக சிந்தாமணியில் பொங்கல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்