ஏகாதசி விரதம் இருப்பவர்கள் இதில் மட்டும் கவனமா இருங்க..!

ஏகாதசி விரதம் இருப்பதில் மிகுந்த கவனம் தேவைப்படுவதால் தீவிர பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பார்கள்.;

Update:2024-07-17 13:58 IST

விரதங்களில் மிக மிக உயர்ந்தது ஏகாதசி விரதம் என்று சொல்வார்கள். இந்த ஏகாதசி விரதங்களிலும் சில ஏகாதசி விரதங்கள் மிகுந்த பலன்களை தரும் ஆற்றலை கொண்டது. குறிப்பாக ஆடி மாதம் மகாவிஷ்ணு சயன கோலத்தில் இருக்கும் ஏகாதசி, அடுத்து மகாவிஷ்ணு படுக்கையில் திரும்பி படுக்கும் பரிவர்த்தினி ஏகாதசி மற்றும் மகாவிஷ்ணு படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் உத்தான ஏகாதசி ஆகிய 3 ஏகாதசிகளும் மிகவும் சிறப்பானவை.

இதில், ஆனி மாத அமாவாசைக்கு பிறகு வரும் சயன ஏகாதசி இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் மேற்கொண்டு பெருமாளை தரிசனம் செய்தால் மற்ற விரதங்களின் பலன்களை பெறலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

ஏகாதசி விரதம் இருப்போர் விரத நெறிமுறைகளை முறையாக பின்பற்றவேண்டியது அவசியம். குறிப்பாக, அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களால் ஆன உணவை முற்றிலும் தவிர்ப்பது முக்கியமான நெறிமுறை ஆகும்.

அரிசி சாதம் மட்டுமல்லாமல் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய வகைகளால் செய்யப்பட்ட பலகாரங்களை உண்பதும் ஏகாதசி விரதத்தை முறிக்கும்.

நவ தானியங்களால் செய்யப்பட்ட உணவுகளும், பருப்பு வகைகளும், பயறு வகைகளும் (கடுகு உளுத்தம் பருப்பு தாளித்துக் கொட்டுதல் உட்பட) ஏகாதசி அன்று முற்றிலும் விலக்கப்பட வேண்டும். காய்கறிகளில் மொச்சை, பீன்ஸ், அவரை போன்ற பயறு வகைகளைச் சேர்ந்த காய்களும் விலக்கப்பட வேண்டும்.

சமையல் எண்ணெய் வகையில் சுத்தமான பசு நெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் தவிர மற்ற அனைத்து எண்ணெய் வகைகளும் விலக்கப்பட வேண்டும். இத்தனை கவனம் தேவைப்படுவதால் தீவிர பக்தர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் ஏகாதசி விரதம் (நிர்ஜல ஏகாதசி) கடைபிடிப்பார்கள். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் துளசி தீர்த்தம் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் பசும்பால், தயிர், பழங்கள் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பர். அதுவும் முடியாதவர்கள் சமைத்த காய்கறிகளைச் உட்கொண்டு விரதம் மேற்கொள்வார்கள்.

ஏகாதசி விரதம் குறித்து பக்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) தொடர்ந்து செயலாற்றி வருகிறது.

ஏகாதசி விரதத்தின் பலன், விரதம் இருக்கும் முறை, விரதத்தை ஆரம்பிக்கும் நேரம், முடிக்கும் நேரம், விரதம் மேற்கொள்ளும்போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என பட்டியலிட்டு பக்தர்களுக்கு வழிகாட்டுகிறது. குறிப்பாக, ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறந்தது என குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி நாள் மற்றும் விரதம் முடிக்க வேண்டிய நேரம் குறித்த காலண்டரையும் இஸ்கான் வெளியிட்டுள்ளது.

ஹரே கிருஷ்ண மகா மந்திரம்:

"ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே;

ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே" 

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

Tags:    

மேலும் செய்திகள்