பாரீஸ் ஒலிம்பிக் : இந்திய அணியில் 117 வீரர், வீராங்கனைகள்...முழு விவரம்

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

Update: 2024-07-18 02:48 GMT

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 32 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 329 பந்தயங்கள் நடத்தப்படுகிறது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய அணியை, இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அணியில் 117 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அணியினருடன் பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 140 பேர் செல்லவும் மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் அமைப்பு கமிட்டி விதிமுறைப்படி ஒலிம்பிக் கிராமத்தில் வீரர், வீராங்கனைகள் தவிர்த்து பயிற்சியாளர், மருத்துவ அதிகாரிகள், உடல் தகுதி நிபுணர்கள், இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகள் உள்பட 67 பேர் மட்டுமே தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கூடுதலாக செல்லும் பயிற்சியாளர்கள், உதவி ஊழியர்கள் உள்ளிட்டோர் ஒலிம்பிக் கிராமத்துக்கு வெளியில் உள்ள ஓட்டலில் தங்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.

இந்திய அணி 16 விளையாட்டுகளில் களம் காணுகிறது. தடகள போட்டியில் அதிகபட்சமாக 29 பேர் (18 வீரர், 11 வீராங்கனை) கலந்து கொள்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக துப்பாக்கி சுடுதலில் 21 பேரும், ஆக்கியில் 19 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர், வீராங்கனைகள் விவரம் வருமாறு:-

தடகளம்:

ஆண்கள் பிரிவு: சர்வேஷ் குஷாரே (உயரம் தாண்டுதல்), சுரஜ் பன்வார் (மாரத்தான் நடைபந்தயம் கலப்பு பிரிவு), அக்ஷ்தீப் சிங், விகாஸ் சிங், பரம்ஜீத் பிஷ்த் (20 கிலோ மீட்டர் நடைப்பந்தயம்), கிஷோர் ஜெனா, நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), முகமது அனாஸ், முகமது அஜ்மல், அமோஜ் ஜேக்கப், சந்தோஷ், ராஜேஷ் (4x400 மீட்டர் தொடர் ஓட்டம்), அவினாஷ் சாப்லே (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்), தேஜிந்தர்பால் சிங் தூர் (குண்டு எறிதல்), அப்துல்லா அபூபக்கர், பிரவீன் சித்ரவேல் (டிரிபிள்ஜம்ப்), ஜெஸ்வின் ஆல்ட்ரின் (நீளம் தாண்டுதல்).

பெண்கள் பிரிவு: அன்னு ராணி (ஈட்டி எறிதல்), பாருல் சவுத்ரி (3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டம்), கிரண் பாஹல் (400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம்), ஜோதி யர்ராஜி (100 மீட்டர் தடை ஓட்டம்), அங்கிதா தயானி (5 ஆயிரம் மீட்டர் ஓட்டம்), பிரியங்கா கோஸ்வாமி (20 கிலோ மீட்டர் நடைபந்தயம், மாரத்தான் நடைபந்தயம் கலப்பு பிரிவு), ஜோதிகா ஸ்ரீ தண்டி, சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பூவம்மா (4x400 மீட்டர் தொடர் ஓட்டம்) மாற்று வீராங்களைகள்: பிராசி, மிஜோ சாக்கோ குரியன்.

வில்வித்தை:

ஆண்கள் ரிகர்வ் பிரிவு: திரஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவீன் ஜாதவ்.

பெண்கள் ரிகர்வ்: பஜன் கவுர், தீபிகா குமாரி, அங்கிதா பகத்.

பேட்மிண்டன்:

எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென் (ஆண்கள் ஒற்றையர்), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி (ஆண்கள் இரட்டையர்), பி.வி.சிந்து (பெண்கள் ஒற்றையர்), அஸ்வினி பொன்னப்பா-தனிஷா கிரஸ்டா (பெண்கள் இரட்டையர்).

குத்துச்சண்டை:

ஆண்கள் பிரிவு : நிஷாந்த் தேவ் (71 கிலோ), அமித் பன்ஹால் (51 கிலோ).

பெண்கள் பிரிவு : நிகாத் ஜரீன் (50 கிலோ), பிரீத்தி பவார் (54 கிலோ), ஜாஸ்மின் லம்போரியா (57 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (75 கிலோ).

குதிரையேற்றம்: அனுஷ் அகர்வாலா (டிரஸ்சாஜ்).

கோல்ப்: ககன்ஜீத் புல்லார், ஷூபாங்கர் ஷர்மா (ஆண்கள் பிரிவு), அதிதி அசோக், திக்ஷா டாகர் (பெண்கள் பிரிவு).

ஆக்கி அணி:

ஸ்ரீஜேஷ் (கோல்கீப்பர்), ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), சுமித், சஞ்சய் (பின்களம்), ராஜ்குமார் பால், ஷாம்ஷிர் சிங், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத் (நடுகளம்), அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித்குமார் உபாத்யாய், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங் (முன்களம்), மாற்று வீரர்கள்: நீலகண்ட ஷர்மா, ஜூக்ராஜ் சிங், கிருஷ்ணன் பகதூர் பதாக்.

ஜூடோ: துலிகா மான் (பெண்கள் 78 கிலோவுக்கு மேல்).

துடுப்பு படகு: பால்ராஜ் பன்வார் (ஆண்கள் சிங்கிள் ஸ்கல்).

பாய்மரப்படகு: விஷ்ணு சரவணன் (ஆண்கள் டிங்கி), நேத்ரா குமணன் (பெண்கள் டிங்கி).

துப்பாக்கி சுடுதல்:

ஆண்கள் பிரிவு : சந்தீப் சிங், அர்ஜூன் பாபுடா (10 மீட்டர் ஏர் ரைபிள்), ஐஸ்வரி தோமர், ஸ்வப்னில் குசாலே (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), சரப்ஜோத் சிங், அர்ஜூன் சீமா (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), அனிஷ் பன்வால், விஜய்வீர் சித்து (25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல்), பிரித்விராஜ் தொண்டைமான் (டிராப்), அமன்ஜீத் சிங் நருகா (ஸ்கீட், ஸ்கீட் கலப்பு அணி).

பெண்கள் பிரிவு : இளவேனில் வாலறிவன், ரமிதா (10 மீட்டர் ஏர் ரைபிள்), சிப்ட் கவுர் சம்ரா, அஞ்சும் மோட்கில் (50 மீட்டர் ரைபிள் 3 நிலை), ரிதம் சங்வான் (10 மீட்டர் ஏர் பிஸ்டல்), மனு பாகெர் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல்), இஷா சிங் (25 மீட்டர் பிஸ்டல்), ராஜேஸ்வரி குமாரி, ஸ்ரேயாசி சிங் (டிராப்), மகேஸ்வரி சவுகான் (ஸ்கீட், ஸ்கீட் கலப்பு அணி), ரைஜா தில்லான் (ஸ்கீட்).

நீச்சல்: ஸ்ரீஹரி நடராஜ் (ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக்), தினிதி தேசிங்கு (பெண்கள் 200 மீட்டர் பிரீஸ்டைல்).

டேபிள் டென்னிஸ்:

ஆண்கள் பிரிவு : சரத் கமல், ஹர்மீத் தேசாய், மானவ் தாக்கர்.

பெண்கள் பிரிவு : மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா காமத், மாற்று வீரர், வீராங்கனை: சத்யன், அஹிகா முகர்ஜி.

டென்னிஸ்: ரோகன் போபண்ணா-ஸ்ரீராம் பாலாஜி (ஆண்கள் இரட்டையர்), சுமித் நாகல் (ஆண்கள் ஒற்றையர்).

பளுதூக்குதல்: மீராபாய் சானு (பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவு).

மல்யுத்தம்:

ஆண்கள்: அமன் ஷெராவாத் (ஆண்கள் 57 கிலோ),

பெண்கள்: வினேஷ் போகத், (50 கிலோ), அன்திம் பன்ஹால் (53 கிலோ), அன்ஷூ மாலிக் (57 கிலோ), நிஷா தாஹியா (68 கிலோ), ரீதிகா ஹூடா (76 கிலோ).

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 119 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்றது. இதில் சிறந்தபட்சமாக இந்தியா ஒரு தங்கம் உள்பட 7 பதக்கம் வென்று அசத்தியது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாறு படைத்தார். இந்த முறை இந்தியா முதல்முறையாக பதக்கப்பட்டியலில் இரட்டை இலக்கத்துக்கு குறி வைத்துள்ளது. துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், தடகளம், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்