'தேவை ஏற்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்' - ஈரான் எச்சரிக்கை
தேவை ஏற்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.;
டெஹ்ரான்,
காசா போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு ஹிஸ்புல்லா அமைப்பு தாக்கி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் அந்த அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக ஈரானும் இணைந்து கொண்டது. கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் மீது சுமார் 180 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகளை தடுத்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியது. அதே சமயம், தங்கள் ஏவுகணைகள் சரியான இலக்கை தாக்கி அழித்ததாக ஈரான் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தேவை ஏற்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார். தலைநகர் டெஹ்ரானில் உள்ள மொசல்லா பள்ளிவாசலில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை தொழுகையின்போது, 80 வயதான அயத்துல்லா அலி காமேனி சுமார் 40 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-
"கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையில் நடத்தப்பட்ட தாக்குதல் பாலஸ்தீன மக்களின் நியாயமான நடவடிக்கையே ஆகும். கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது ஈரான் படைகள் நேர்த்தியான தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்த ஏவுகணை தாக்குதல் சர்வதேச சட்டம், நாட்டின் சட்டம் மற்றும் இஸ்லாமிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த தயாராக உள்ளோம்.
ஆப்கானிஸ்தான் முதல் ஏமன் வரை, ஈரானில் இருந்து காசா வரை நாம் அனைவரும் எதிரிகளை எதிர்த்து போரிட தயாராக இருக்க வேண்டும். லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தில் போரிட்டு வரும் துணிச்சலான போராளிகளே, விசுவாசமும் பொறுமையும் கொண்ட மக்களே, இந்த தியாகங்களும், சிந்தப்பட்ட ரத்தமும் உங்கள் உறுதியை அசைத்துவிடாமல் இருக்க வேண்டும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.