அமெரிக்க அதிபர் தேர்தல்: நாளை வாக்குப்பதிவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசுக்கும் டொனால்டு டிரம்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வாஷிங்டன்,
உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.மொத்தம் 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர்.
எஞ்சியவர்கள் அமெரிக்காவின் 50 மாகாணங்களில் நாளை வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். பெரிய அளவில் இழுபறி ஏற்படாவிட்டால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது தெரிந்துவிடும்.
தற்போதைய நிலவரப்படி கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு 49 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிரம்புக்கு 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் இரண்டு நாட்களில் ஓரளவு விடை தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.