ஹவுதி அமைப்புக்கு குறி.. ஏமனில் அமெரிக்க-பிரிட்டன் படைகள் வான் தாக்குதல்

செங்கடலை ஒட்டிய அலுஹையா மாவட்டத்தில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடான பிரிட்டனும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-06-23 07:29 GMT

சனா:

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரில் காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹவுதி அமைப்பு களமிறங்கி உள்ளது. ஏமனின் வடக்கு பகுதிகளில் பெரும்பாலான இடங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி அமைப்பினர், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து செங்கடல் பகுதியில் செல்லும் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக அமெரிக்காவும் மற்றும் அதன் நட்பு நாடுகளும் கடந்த சில மாதங்களாக ஏமன் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகின்றன.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் இணைந்து ஏமனின் ஹொடைடா மாகாணத்தின் மீது வான் தாக்குதல் நடத்தி உள்ளது. செங்கடலை ஒட்டிய அலுஹையா மாவட்டத்தில் நான்கு முறை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, ஹவுதி சார்பில் நடத்தப்படும் அல்-மசிரா டிவி இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் தாக்குதலில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான விரிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சார்பிலும் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை ஹவுதி சார்பில் செங்கடல் நோக்கி அனுப்பப்பட்ட நான்கு டிரோன் கப்பல்கள் மற்றும் இரண்டு டிரோன் விமானங்களை அமெரிக்க - பிரிட்டன் படைகள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்